Tamil Sanjikai

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக பயணிகள் விமானம் நேற்று மதியம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து 263 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மும்பையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, விமானத்தின் பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. இன்று காலை சிங்கப்பூர் வான் பகுதிக்குள் விமானம் நுழைந்ததும், விமானப்படையின் உதவியுடன் அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரையும் உடனடியாக கீழே இறக்கி சோதனையிட்டனர். விமானத்தையும் முழுமையாக சோதனையிட்டனர். இந்த சோதனையில் விமானத்தில் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, குழந்தையுடன் வந்த ஒரு பெண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments

Write A Comment