Tamil Sanjikai

அப்துல் கலாம் ஐயா அவர்களது பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு பா.ஜனதா முன்னாள் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஆனந்த் பாஸ்கர், மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை தேசிய மாணவர் தினமாக அனுசரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐநா தொடர்புடன், இந்த நாள் ஏற்கனவே உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15-ம் தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க தங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஏவுகணை மனிதன்’ கனவு கண்டது போல நம்முடைய மாணவர்களிடம் ஒரு பொறியை பற்றவைக்க இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

அப்துல் கலாம் மறைந்த நாளிலிருந்து கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15-ம் தேதியை தங்கள் சொந்த விருப்பத்திலேயே அனுசரித்து வருகின்றன. ஜூன் 21 உலக யோகோ தினமாகவும், ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாகவும் கொண்டாடுவதைப்போல அப்துல் கலாம் பிறந்த தினத்தையும் அதே உற்சாகத்துடன் கடைபிடிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

0 Comments

Write A Comment