கொல்கத்தாவில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ரூபா கங்குலி, முன்னாள் நடிகையும், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான இவர் தெற்கு கொல்கத்தா பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு ரூபா கங்குலியின் 20 வயது மகன் ஆகாஷ் முகோபத்யாய், தனது காரில் வேகமாக சென்ற போது அவர் ஊட்டி வந்த கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தெற்கு கொல்கத்தாவில் உள்ள கோஃல்ப் கார்டனின் சுவற்றில் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடைபெற்ற பகுதியில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எம்.பி ரூபா கங்குலியின் மகனை கைது செய்தனர். பின்னர், அலிபோர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை ஆகாஷ் தனியாக ஓட்டி வந்ததாகவும், அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
எனினும், மருத்துவ பரிசோதனையில் ஆகாஷ் மது போதையில் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும், இது இயந்திர கோளாரால் ஏற்பட்ட விபத்து என்றும் ஆகாஷின் வழக்கறிஞர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி ரூபா கங்குலி, எனது வீட்டின் அருகே எனது மகன் விபத்தை ஏற்படுத்தியுள்ளார், இது தொடர்பாக காவல்துறையை தொடர்புகொண்டு பேசி, சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்குமாறும் எந்தவித சாதகமோ தேவையில்லை, அரசியல் தவிர்க்கபடட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பியின் மகன், காரில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
0 Comments