Tamil Sanjikai

கேரள மாநிலத்தில் சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து தீவிரமாக போராட்டங்கள் நடத்திய பாஜக, உள்ளாட்சி இடைத்தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அமல்படுத்துவோம் என்று பினராய் விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கூறிய நிலையில், அங்கு பாஜக மற்றும் பல இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

வன்முறை, கலவரம் என்று சபரிமலை விவகாரம் வெடித்த நிலையில், பாஜக தலைமையில் நடந்த போராட்டத்துக்கு மக்களிடையே ஆதரவு இருக்கவே செய்தது. அதிலும் குறிப்பாக தீர்ப்புக்கு எதிரான பேரணி, போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர். சபரிமலை பிரச்சனை மூலம் அங்கு தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள பாஜக தீவிரமாக களப்பணியாற்றியது.“சபரிமலை விவகாரம் நமக்கு கிடைத்துள்ள தங்கமான வாய்ப்பு” என்று அம்மாநில பாஜக தலைவர் வெளிப்படையாகவே கட்சிக்கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனாலும், பாஜகவின் முயற்சிகளை தடுக்கும் விதமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “சபரிமலையை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்து வருகிறது என்று குற்றம் சாட்டியது.

அம்மாநிலத்தின் மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ், சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரை பாஜகவின் கருத்தோடு ஒத்து இருந்தது. இதனால், ஆளுங்கட்சிக்கு செல்வாக்கு சரியும் என்றே கணிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதியில் காலியாக இருந்த 39 உள்ளாட்சி இடங்களுக்கு கடந்த மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆளும் இடதுசாரி கூட்டணி 21 இடங்களை பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பாஜக தலைமையிலான கூட்டணி 2 இடங்களை மட்டுமே பிடித்தது. மேலும், ஏற்கனவே தனது வசம் வைத்திருந்த பரப்புக்கரா வார்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது. குறிப்பாக சபரிமலை போராட்டம் உச்சத்தில் இருந்த பத்தனம் திட்டா, பந்தளம் ஆகிய இடங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

0 Comments

Write A Comment