சபரிமலையில் இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து, கேரளாவின் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலையில், நேற்று காலை இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கு அனுமதி வழங்கியதற்காக, முதல்வர் பினராய் விஜயன் பதவி விலகக் கோரி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம், கோழிக்கோடு, ஆலப்புழா, நெய்யாற்றின் கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சாலையில் அமர்ந்தும், ஊர்வலமாக சென்றும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள தலைமைச் செயலகம் அருகே, பாஜகவினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சரமாரியாக கல்வீச்சில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் கடைகளை அடைக்க வலியுறுத்தியும், சாலைகளில் டயர்களை எரித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள், பேனர்களை பாஜகவினர் கிழித்து தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து, மோதலை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி, போராட்டக்காரர்களை விரட்டினர். எனினும், பதற்றம் நீடிப்பதால், கேரள தலைமைச் செயலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, முழு அடைப்பு போராட்டத்திற்கும், சபரிமலை பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
0 Comments