Tamil Sanjikai

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

இந்த மனுக்கள் கடந்த அக்டோபர் 29ம் தேதி விசாரணைக்கு வந்த போது, அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி கவுல் அடங்கிய அமர்வு முன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகே அயோத்தி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment