ஜம்மு -காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பலிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதியுடன் இந்த யாத்திரை முடிவடையுள்ள நிலையில் நேற்றுவரை 3 லட்சம் பேர் மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில தினங்களாக மழை பெய்து வருவதாலும், இந்த யாத்திரைக்கு செல்லும் பல்டால், பாஹல்கம் ஆகிய இருவழிப் பாதைகளிலும் லேசான மழை பெய்து வருவதாலும், இன்று தற்காலிகமாக இந்த யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பனிலிங்கத்தை தரிசிக்க வேண்டிய நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மோசமான வானிலை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு, யாத்திரை மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூலை 1 -ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூலை 4 -ஆம் தேதி மோசமான வானிலை காரணமாகவும், ஜூலை 8 -ஆம் தேதி, அதிக கூட்டம் காரணமாகவும் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments