Tamil Sanjikai

பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கஅனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்தும், அரசு எடுக்க போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், அரசுக்கு எடுக்க உள்ள நடவடிக்கைக்கு ஒருமித்த ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறின.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. காஷ்மீரில் கடந்த 14ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர் இழக்க காரணமான கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த சோகமான நேரத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களோடு, நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து நாங்கள் உடன் இருக்கிறோம்.

2. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவு மற்றும் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

3. கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், இந்தியா பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு எல்லைக்கு அப்பாலில் இருக்கும் ராணுவம் உதவி செய்கிறது. இந்த சவாலை இந்தியா திடமாகவும் வலிமையாகவும் எதிர்கொள்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் இந்தியாவின் ஒற்றுமைக்காக போராடி வரும் பாதுகாப்பு படையினருடன் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

0 Comments

Write A Comment