உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதன்பின்னர் 27-ந் தேதி, பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. அந்த விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.
அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பாலக்கோட் தாக்குதலில் 9வது படைப்பிரிவு மற்றும் அபிநந்தனின் 51வது படைப்பிரிவு ஈடுபட்டது. இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள், இன்று நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற விமானப்படை விழாவின்போது, இந்த இரண்டு படைப்பிரிவுகளுக்கும் வீர தீரச்செயல்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாராட்டு சான்றிதழை படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகளிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்கி கவுரவித்தார்.
ஐந்து துணிச்சலான விருது பெற்றவர்கள் மூன்று மிராஜ் 2000 விமானிகள் மற்றும் இரண்டு சு -30 எம்.கே.ஐ. விமானிகள் ஆவர்.
விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தை இயக்கினார். அவருடன் 3 மிராஜ்-2000 ரக விமானம் மற்றும் 2 எஸ்.யூ-30 எம்கேஐ ரக விமானம் ; அவெஞ்சர் அணிவகுப்பை நடத்தி காட்டினர்.
சினூக் மற்றும் அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து சாகசங்களை நிகழ்த்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.
0 Comments