Tamil Sanjikai

தமிழக இடைத்தேர்தல் குறித்து அதிமுக தலைமை இன்று ஆலோசனை

கடந்த சில மாதங்களுக்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் சட்டமன்ற தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. மேலும் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதையடுத்து காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் வரும் ஜனவரியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. இந்த இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி, தோல்வி ஆட்சியை நிர்ணயிக்கும் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுடன் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனையின்போது, 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வது, வெற்றி பெற என்ன வழி செய்ய வேண்டும் தேர்தல் பணிமனைகளை அமைப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 20 தொகுதிகளுக்கும் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.

0 Comments

Write A Comment