கேரள மாநிலம் சபரி மலைக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16- ஆம் தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் கோவில் நடை திறந்தபோது பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் சபரிமலை செல்ல தயங்கினார்கள்.
இந்நிலையில் சபரிமலையில் நடந்த போராட்டங்கள் அண்மையில் விலக்கிக்கொள்ளப்பட்டது. போலீசாரின் கெடுபிடிகளும் குறைந்தன. மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஐகோர்ட் நியமித்த குழு ஆய்வு செய்து இசைவு தெரிவித்தது. இதையடுத்து சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தினமும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் குவிய தொடங்கினார்கள்.
சபரிமலை நடைதிறந்து 2 வாரங்களுக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்த பின்பு நேற்று தான் மிக அதிகளவில் பக்தர்கள் வந்துள்ளனர் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகளவில் பத்தர்கள் குவிந்ததால் சன்னிதானத்தில் 18-ஆம் படி ஏற 3 மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
0 Comments