Tamil Sanjikai

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணியில் திறமையின்மை போன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:–

அரசு ஊழியர் பணி விதிகளின்படி கடந்த 2014 ஜூலை முதல் 2019 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் குரூப்–ஏ பிரிவு அதிகாரிகள் 36,756 பேர் மற்றும் குரூப்–பி பிரிவு அதிகாரிகள் 82,654 பேரின் பணி ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் குரூப்–ஏ பிரிவில் அதிகாரிகள் 125 பேர் மற்றும் பி பிரிவில் அதிகாரிகள் 187 பேர் என மொத்தம் 312 பேர் மீது ஊழல் மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

அனுமதிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கட்டாய பணி ஓய்வு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

இதைப்போல ஒருங்கிணைப்பு மற்றும் பணித்திறன் குறைபாடு கொண்ட அதிகாரிகளுக்கும் பொதுநலன் கருதி முன்கூட்டியே பணி ஓய்வு அளிக்கும் அதிகாரமும் அரசுக்கு உண்டு.

இவ்வாறு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.

0 Comments

Write A Comment