Tamil Sanjikai

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், அங்குள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக் எடுத்து கொள்ளுமாறு கூறி இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 14 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மசூதி என்பது இஸ்லாமிய மதத்துடன் ஒருங்கிணைந்த ஒன்று அல்ல என்று 1994-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

கடந்த மாதம் 26-ந்தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தை மத்தியஸ்தர்களை கொண்டு தீர்வு காண கோர்ட்டு முயற்சிப்பதாகவும் இது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க மார்ச் 6-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி கடந்த 6-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்து மகாசபா, உத்தரபிரதேச அரசு மற்றும் ராம் லல்லா விராஜ்மான் விக்கிரகம் ஆகியோர் தரப்பில் மத்தியஸ்தர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிக்கும் யோசனையை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவை கோர்ட்டில் தெரிவித்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மத்தியஸ்தர்களை கொண்ட சமரச குழுவை அமைப்பது தொடர்பான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சினைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* இந்த வழக்கில் உரிய தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தர்களை கொண்ட சமரச குழுவை அமைப்பதில் சட்டரீதியாக எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, அனைத்து தரப்பினரும் பரிந்துரைத்த பெயர்களை பரிசீலனை செய்ததன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டு உள்ளது.

* தேவைப்பட்டால் சமரச குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்களை அவர்களே நியமித்துக் கொள்ளலாம்.

* இந்த குழுவின் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், உரையாடல்கள் ஆகியவை தொடர்பான அந்தரங்கத்தன்மை, ரகசியம் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும். சமரச குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் எடுக்கப்படும் முடிவுகளை, குழுவில் உள்ளவர்கள் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

* பிரச்சினைக்கு தீர்வு காண சமரச குழு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தை விவரங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் எந்தவகையிலும் வெளிவரக்கூடாது. இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவை இல்லை என்று கோர்ட்டு கருதுகிறது. சமரச பேச்சுவார்த்தை விவரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க சமரச குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

* இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் சமரச குழுவின் தலைவருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அவர் இந்த கோர்ட்டின் பதிவாளரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தலாம். சமரச பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் கோர்ட்டு பதிவாளருக்கு தெரிவிக்கலாம்.

* சமரச பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் இக்குழுவின் கூட்டங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் நடைபெறும். சமரச குழுக்களுக்கான விதிமுறைகளின் அடிப்படையில் இந்த குழுவின் கூட்டங்கள் மூடிய அறைக்குள் நடைபெறவேண்டும். பேச்சுவார்த்தையின் எந்த கட்டத்திலும் தேவையான சட்ட ஆலோசனைகளை சமரச குழுவினர் பெற்றுக் கொள்ளலாம்.

* சமரச குழுவின் கூட்டம் நடைபெறும் இடத்துக்கான ஏற்பாடு, சமரச குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடு, பயண ஏற்பாடுகள், ஆகியவற்றை உத்தரபிரதேச மாநில அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.

* இந்த சமரச குழுவின் கூட்டம் ஒரு வாரத்துக்குள் தொடங்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

* சமரச குழு 8 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவேண்டும்.

* சமரச பேச்சுவார்த்தை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை, சமரச குழுவின் நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து 4 வாரங்களுக்குள் இந்த கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள சமரச குழுவின் தலைவரான சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உறுப்பினர்கள் ஸ்ரீ ரவிசங்கர், சென்னை ஐகோர்ட்டின் மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சமரச குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment