Tamil Sanjikai

இன்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ஆந்திராவில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்கிநாடா மார்க்கத்தில் செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் உள்ள 350 கிராமங்களுக்கும், ஒடிசாவிற்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் மசூலிப்பட்டினத்திற்கு அருகே, மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கிருஷ்ணா மாவட்டத்தில் மணிக்கு 49.2 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது. தற்போது வங்கக் கடலில் காக்கிநாடாவிற்கு 200 கி.மீ., தொலைவில் பெய்ட்டி புயல் மையம் கொண்டுள்ளது.

விசாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் சேவை உதவி மையங்கள் திறக்கப்பட்டு, இதற்கான அவசர அழைப்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை காரணமாக கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்ட விவசாயிகள் 1.2 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க இரவு - பகலாக வேலை செய்து வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில், 1000 போலீசார், 500 பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட சுமார் 10,000 மாநில அரசு பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தின் தெற்கு பகுதியில் உள்ள மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment