Tamil Sanjikai

கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருமண பதிவுக்கு கூட்டு விண்ணப்பத்தை கோட்டயத்தில் உள்ள ஒரு துணை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதற்கு நினுவின் குடும்பத்தினர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தனர்.

மூன்று வாகனங்களில் சென்ற ஒரு கும்பல், கோட்டயத்தில் கெவின் வீட்டை சூறையாடியது, கெவினையும் அவரது நண்பர் அனிஷையும் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர் அனீஷை கடுமையாகத் தாக்கி வழியில் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில் கெவினின் உடல் மே 28 அன்று கொல்லம் மாவட்டத்தில் ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

கெவின் ஜோசப் ஆணவ கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 22 ம் தேதி இந்த 14 பேரில் 10 பேர் குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. கெவின் காதலியான நீனுவின் சகோதரர் சானு சாக்கோ, நியாஸ் மோன், இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராஹிம்குட்டி, மனு முரளிதரன், ஷிபின் சஜாத், நிஷாத், பாசில் ஷெரிப் மற்றும் சானு ஷாஜகான் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நீனுவின் தந்தை சாக்கோ ஜான் மற்றும் ரமிஸ் ஷெரீப், ஷினு ஷாஜகான், விஷ்ணு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

இந்த நிலையில் இன்று 10 குற்றவாளிகளுக்கும் கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இரட்டை ஆயுள் தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

ஒவ்வொரு குற்றவாளிக்கும் ரூ .40,000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. . இதில் தலா ரூ .1.5 லட்சம் நீனு மற்றும் கெவின் தந்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் . கெவின் நண்பர் அனீஷும் கடத்தப்பட்டு அவருடன் தாக்கப்பட்டார், அபராதத்திலிருந்து அவருக்கு ரூ .1 லட்சம் வழங்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 13, 2019 அன்று தொடங்கிய இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த வழக்கு ஒரு ஆணவக் கொலை என்று கருதப்பட்டதால், ஆறு மாத காலப்பகுதியில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment