Tamil Sanjikai

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தை அரசு ஊழியர் ஆவார். அவனுடைய தாயார் பாட்னாவில் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார். சிறுவனின் தந்தை மற்றும் தாயார் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் வெறுப்படைந்த சிறுவன் தற்கொலை செய்து கொள்ள தனக்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளான். சிறுவன் தனது பெற்றோருக்கு இடையிலான மோசமான சண்டைகள் குறித்து தனது நிலையை கடிதத்தில் விவரித்துள்ளான், தனது படிப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை தாயார் சமூக விரோதிகளைக் கொண்டு மிரட்டுகிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளான். இந்த நிலைமையால் வெறுப்படைந்த சிறுவன் தனது வாழ்க்கையை முடிக்க விரும்பினான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடிதத்தை ஜனாதிபதி அலுவலகம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. பிரச்சனையை சரிசெய்ய கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது. சிறுவனின் பெற்றோர் இருவரும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments

Write A Comment