Tamil Sanjikai

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். குடும்பத்தினரின் தொடர் கண்காணிப்பிலே இருந்து வந்துள்ள இவருக்கு இரண்டு மாதங்களாக வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் அவருக்கு வலி குறைந்ததாகத் தெரியவில்லை.

இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரது வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்ததில் சில பொருள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்ததில் அவரது வயிற்றிலிருந்து 1.5 கிலோ அளவுக்கு நகைகள் மற்றும் காசுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அந்தப்பெண் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ``அந்தப் பெண்ணின் வயிற்றில் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள், மூக்குத்தி, தோடு, வளையல், கைகளில் அணியும் பேட் ஆகியவை இருந்தன. அவற்றில் சில தங்க நகைகளும் இருந்தன” என மருத்துவர்கள் கூறினர்.

அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில், ``என் மகள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாள்களாக சாப்பிட்ட பின்னர் எல்லாப் பொருள்களையும் தூக்கி எறியத்தொடங்கினார். எங்கள் வீட்டில் இருந்த நகைகள்தான் இவையனைத்தும். ஆனால், இதை விழுங்கியிருப்பாள் என நாங்கள் நினைக்கவில்லை. காணாமல் போன பொருள்கள் குறித்துக் கேட்டுள்ளோம். அப்போது எல்லாம் அழத் தொடங்கிவிடுவார்” என்றார்.

0 Comments

Write A Comment