பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி டெல்லியில் 14 பேரைக் கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மேலும்,அவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.
தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகையில் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கணினிகள், மடிக்கணினிகள், செல்போன்கள், சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
நள்ளிரவு வரை அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் கொண்டு வரப்பட்ட அவர்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டெல்லியில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களும் அன்சாருல்லா அமைப்பிற்காக செயல்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
துபாய் சென்று நாடு திரும்பிய அவர்களைக் கைது செய்துள்ள அதிகாரிகள் தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். 14 பேரும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
0 Comments