Tamil Sanjikai

முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது.

ஆனால், நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்த தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வுகளை பின் வரும் தேதிகளில் நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. மாற்றப்பட்ட தேர்வு தேதி அதன் விவரம் வருமாறு:-

* முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு- மே.11-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

* வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

* உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

* அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு- மே.5-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்.

ஏற்கனவே அறிவித்தப்படியே, கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5-ந்தேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12-ந்தேதியும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment