Tamil Sanjikai

தமிழக வனத்துறையில் பணி, விண்ணப்பிக்க 3 நாட்களே இருக்கிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வனத்துறையில் 300 வனவர் பணிக்கும், 726 வனக்காப்பாளர் பணிக்கும், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தம் 1,178 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் இணையவழி (ஆன்லைன்) மூலமாக தேர்வு நடத்த உள்ளது. இந்தப் பணியிடங்களில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்வித் தகுதியாக, வேளாண்மை, அனிமல் ஹஸ்பண்டரி, தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், பொறியியல், சூழ்நிலை அறிவியல், வனவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதவியல், இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வனவாழ்வு உயிரியல், உயிரியல் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு +2-ல் அறிவியல் பிரிவில் படித்திருக்கவேண்டும்.

இதற்கு வயது வரம்பு, விண்ணப்பவர்கள் வயது 30-க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் வரை தளர்வு அனுமதிக்கப்படுகிறது. இடஒதுக்கீடு: வனக்காப்பாளர் பணிக்கு பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் 3.5சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15 சதவீதம், அருந்ததியர் 3 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் என்கிற ஒதுக்கீட்டிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பிரிவுகளில் பெண்களுக்கு 30 சதவீதம், ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள் அனைத்து பணியிடங்களிலும் 20 சதவீதம் தகுதியானவர்களாக பரிந்துரைக்கப்படுவார்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 5.11.2018.

தேர்வு முறை : வனவர் பணிக்கு இணையவழி மூலமாக தலா 100 மதிப்பெண்கள் அடிப்படையில் பொது அறிவு தேர்வு மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு தொடர்பான தேர்வு என 2 தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புடன் ஆண்கள் 25 கி.மீ. தூரமும், பெண்கள் 16 கி.மீ. தூரமும் 4 மணி நேரத்தில் நடந்து காட்டவேண்டும். உடல் தகுதியாக உயரம் 163 செ.மீ., பழங்குடியினர் 152 செ.மீ. இருக்கவேண்டும். மார்பு 1 செ.மீ. விரிவடைய வேண்டும்.

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு நேர்காணல் நடத்தப்படாது. 150 மதிப்பெண்கள் கொண்ட ஒரே தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. மேலும் விரிவான விவரங்களை அறிய www.forests.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்து, தெரிந்துக் கொள்ளலாம்.

0 Comments

Write A Comment