Tamil Sanjikai

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. ஃபானி புயல், கர்நாடகாவில் ரயில் தாமதம் ஆகிய காரணங்களால் தேர்வெழுத முடியாதவர்களுக்கு இந்த தேர்வு 20-ஆம் தேதியும் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் அதிக மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in-ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதிய மாணவர்களில் கடந்த ஆண்டு 39 புள்ளி 56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 48 புள்ளி 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக நீட் தேர்வு எழுதியவர்களில் 56 புள்ளி 27 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 74 புள்ளி 92 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 701 மதிப்பெண்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நளின் கந்தல்வால் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

முதல் 50 இடங்களில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநில மாணவ, மாணவிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தமிழக மாணவ, மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

எனினும் டாப் 20 மாணவிகளுக்கான பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ருதி 10-வது இடத்தைப் பெற்றுள்ளார். தேசிய தரவரிசைப் பட்டியலில் 57-வது இடத்தைப் பிடித்துள்ள ஸ்ருதி தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நீட் தேர்வுக்காக தனியாக பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கவில்லை என்று தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி சுருதி தெரிவித்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க 11, 12, ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தை முறையாக சொல்லி தர வேண்டும் என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் வலியுறுத்தி இருக்கிறார்.

0 Comments

Write A Comment