இந்திய அரசியலமைப்பின் படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு எதிரான தனியார் பள்ளிகளின் விகிதம் 7: 5 என்ற நிலையில் உள்ளது.
தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் இந்தியாவில் அதிக அளவிலான தனியார் பள்ளிகள் உள்ளன. 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் 71 சதவீத மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் தான் கல்வி பெறுகின்றனர். எஞ்சியிருக்கும் 29 சதவீத மாணவர்கள் மட்டுமே தனியார் கல்வி நிலையங்களில் பயில்கின்றனர்.
இந்நிலையில் நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் கல்வியின் தரம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இந்தியாவில் கல்வி தரத்தினை காட்டிலும், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
சீனாவில் 5 லட்சம் பள்ளிகள் உள்ளன. அதைவிட 3 மடங்கு அதிகமாக இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. இந்தியாவில் கல்வித்தரம் பாதிக்கப்பட மிக முக்கிய காரணம், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகள் ஆகும். 4 லட்சம் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 1.5 கோடி மாணவர்கள் நிர்வாகம் சரியில்லாத பள்ளிகளில் பயில்கின்றனர்.
0 Comments