Tamil Sanjikai

நீட் விண்ணப்பப் படிவத்தில் ஓ.பி.சி என மாணவர் தவறாக குறிப்பிட்டிருந்தை எஸ்.சி.யாக மாற்றம் செய்து, எஸ்.சி பிரிவில் தர வரிசையை சேர்க்க வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், எஸ்.சி பிரிவை சேர்ந்த தனது மகன் விக்ரம் பாலாஜி, கடந்த மே 5-ல் நீட் தேர்வு எழுதினார் என்றும், நீட் விண்ணப்ப படிவத்தில், எஸ்.சி என குறிப்பிடுவதற்கு பதில் ஓ.பி.சி என தவறுதலாக குறிப்பிட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். ஜுன் 5-ல் வெளியான நீட் தேர்வு பட்டியலில் எனது மகனின் மதிப்பெண் ஓ.பி.சி பிரிவில் இடம் பெற்றுள்ளது என்றும், இதை எஸ்.சி பிரிவுக்கு மாற்றம் செய்தால் மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் கூறியிருந்தார். தற்போது மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதாகவும், எஸ்.சி பிரிவு தர வரிசையில் சேர்க்கும் வரை ஒரு எம்.பி.பி.எஸ் சீட்டை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டுமெனவும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், நீட் விண்ணப்பப் படிவத்தில் ஓ.பி.சி என்றிருப்பதை மாற்றம் செய்து, எஸ்.சி பிரிவில் தர வரிசையில் சேர்க்க தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

0 Comments

Write A Comment