Tamil Sanjikai

மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் , மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த கல்வி ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்தது. அனால் இதுவரை தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலித்து வருகின்றனர்.

எனவே 2018–2021ம் ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணய குழுவிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 2018–2021–ம் ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக்கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அடுத்த ஒரு மாதத்துக்குள் கல்விக்கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

0 Comments

Write A Comment