தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு ஆலோசனை இன்று நடக்க உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 14 லட்சம் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கவில்லை என குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது முதல்வரின் கையில் உள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரசின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று ஜாக்டோ ஜியோ சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை நடக்க உள்ளது.
0 Comments