நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு எந்த தகவலும் வெளியிடாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி சட்டபேரவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 'மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக' இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியதாக மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. மத்திய அரசு அளிக்கும் பதிலுக்கேற்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து அமைச்சரோ அல்லது செயலரோ தெரியாது என்று கூறமுடியாது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு எந்த ஒரு தகவலும் வெளியிடாதது ஏன்?
மேலும், விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதங்களை பெற்றுகேகொண்டதாக மத்திய அரசு ஏன் எந்த தளத்திலோ அல்லது அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
ஒரு மசோதாவை குடியரசுத்தலைவர் நிராகரித்து அனுப்பிவிட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் வேறு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைக்கலாமே?" என்று நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் தமிழக அரசு உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு வரும் ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments