அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் ஆகியோர் மீது, தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், மாணவர் சேர்க்கை இல்லாத, 92 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
அவற்றுள் ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்தியும், ஒரு சில கல்லூரிகளில் பாதியாக குறைத்தும் பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தரமற்றவை என அறிவிக்கப்பட்ட 92 கல்லூரிகளுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் எந்தெந்த கல்லூரிகள் தரமற்றவை என்ற விவரங்களை அறிவிக்காமல், பொதுவாக 92 கல்லூரிகள் தரமற்றவை என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தரமற்றவை என அறிவிக்கப்பட்ட கல்லூரிகளின் விவரங்கள் வெளியிடப்படாததால், அந்த கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
எனவே மாணவர்கள் தரமான கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில், தரமற்ற கல்லூரிகளின் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் இதுவரை தரமற்ற பொறியியல் கல்லூரிகள் குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட மறுப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் விவரங்களை வெளியிட மறுப்பதற்கான பின்னணி குறித்து ஆராய வேண்டும் எனவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை பகிரங்கமாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர், விவரங்களை வெளியிடாமல் இருக்க, கருப்பு பணத்தை லஞ்சமாக பெற்றனரா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் குமார், லஞ்ச குற்றச்சாட்டு குறித்த புகாரில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தரமற்றதாக அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் தற்போது பயின்று கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, பெயர்கள் வெளியிடப்படவில்லை எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சுரப்பாவிடம் கலந்தாலோசித்து, கல்லூரிகளின் பெயர் பட்டியல் வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments