Tamil Sanjikai

பிரபல எழுத்தாளரும், திரைக்கதை, வசனகர்த்தாவுமான ஜெயமோகன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்திவபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

பாபநாசம், நான் கடவுள், சர்க்கார், 2.0 உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நேற்று தனது வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு சென்று பார்த்தபோது மாவு காலாவதியானது தெரிய வந்தது, அதை திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, கடைக்கார பெண்மணி தன்னை திட்டியதாகவும், அந்தப் பெண்ணின் கணவர் தன்னை தாக்கியதாகவும் ஜெயமோகன் புகார் கூறியுள்ளார்.

கடையில் வைத்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த மளிகைக் கடைக்காரர் தன் வீட்டருகே வந்து குடிபோதையில் தகாத வார்த்தையில் பேசியதாகவும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

ஜெயமோகன் அளித்த புகாரின்பேரில், மளிகைக் கடைக்காரர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அதேசமயம், மாவு பாக்கெட்டை தமது முகத்தில் ஜெயமோகன் வீசியெறிந்து தகாத வார்த்தைகளால் பேசியதால் தான் , தாக்கியதாகவும் தாம் அளித்த புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை என மளிகைக் கடைக்காரரின் மனைவி கீதா குற்றம்சாட்டியுள்ளார்.

அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தால் யார் மீது தவறு என்பது தெரிந்துவிடும் என மளிகைக் கடைக்காரர் செல்வம் கூறியுள்ளார்.

மேலும் ஜெயமோகன் மாவு பாக்கெட்டை முகத்தில் வீசியெறிந்ததைத் தொடர்ந்தே கைகலப்பு உருவானதாக மளிகைக் கடையில் பணியாற்றியவர்கள் கூறியுள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்டதால் ஏற்பட்ட சிராய்ப்பு, வலி, வீக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னால் அதிகம் பேச முடியவில்லை என்றும் அவர் பேட்டியளித்தார்.

0 Comments

Write A Comment