Tamil Sanjikai

100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 31ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

99 சதவீத பொருட்கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. எனவே, 28 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் உள்ள பொருட்களை 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்த பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், 23 பொருட்கள் வரி 28 சதவீத வரம்பில் இருந்து 18 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதேபோல, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, 33 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி, 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

0 Comments

Write A Comment