Tamil Sanjikai

இந்தியாவில் ரப்பர் தொடர் விலை சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த ஏழு மாதத்தில் 3.15 லட்சம் டன்னாக ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ்.4 கிரேடு ரப்பர் கிலோ ரூபாய் 176.82 என்று சராசரி விலை இருந்து வந்தது. தற்போது விவசாயிகளுக்கு 121 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு கிலோ 123.50 ரூபாயாகவும், கொச்சியில் கிலோ 123 ரூபாயாகவும் நேற்று முன்தினம் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையான பாங்காக்கில் 101.53 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டாக உள்நாட்டு உற்பத்தி குறைந்து ரப்பர் இறக்குமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ரப்பர் இறக்குமதி உள்நாட்டு உற்பத்தியை கடந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 3.15 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி 3.44 லட்சம் டன்.தாய்லாந்து, இந்தோனேஷியா நாடுகள் இந்திய ரப்பர் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. வியட்நாம், சீனாவில் இருந்தும் ரப்பர் வரத்து அதிகரித்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொத்த ரப்பர் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 6.94 லட்சம் டன் என்று குறைந்தது. இந்த உற்பத்தியில் கேரளா தவிர தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பங்களிப்பு மட்டும் 1.50 லட்சம் டன் ஆகும். ரப்பர் உற்பத்தி அதிகரித்தும் விலை சரிவில் இருந்து ரப்பர் மீளவில்லை.இதனால் இறக்குமதி ரப்பருக்கு கட்டுப்பாடுகள் விதிக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ரப்பர் இறக்குமதி அதிகரிப்பால் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாகவும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

0 Comments

Write A Comment