ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவி விலகுகிறாரா?
கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்திருந்தார் . 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா பேசியதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணம் சென்றுள்ள நிலையில் ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் அரசுடனான கருத்து வேறுபாட்டை இவ்வாறு வெளிப்படையாகப் பேசியது மிகுந்த அதிருப்தி அளிப்பதாக அப்போது அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்குப் பதில் தரும் வகையில் ரிசர்வ் வங்கியைக் குற்றம்சாட்டி அருண் ஜேட்லி பேசினார்.‘‘2008 முதல் 2014-ம் ஆண்டுவரை, வங்கிகள் தங்கள் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அனைவருக்கும் கடன் அளித்தது . யாருக்குக் கடன் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்கிற பாகுபாடு இல்லாமல் கடன் கொடுக்கப்பட்டது. இதைத் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கி அப்போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போதே ரிசர்வ் வங்கி இதைத்தடுக்காததால் தான் இப்போது வாராக்கடன் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது’’எனத் தெரிவித்தார்.
ஆர்.பி.ஐ விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆச்சார்யா தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், இது தொடரும் என்றும் கூறி உள்ளது. மத்திய அரசு இந்த ஆலோசனைகளின் தலைப்புகளை வெளியிடவில்லை எடுத்துக் கொண்ட இறுதி முடிவுகள் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றது.
ரிசரவ் வங்கிக்கான சுயாட்சி, ஆர்.பி.ஐ. சட்டத்தின் கட்டமைப்பிற்குள், அவசியமான மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சி தேவை. மத்திய அரசு இதை வளர்ப்பதுடன் மதிக்கின்றது என நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் படேல் பதவி விலக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரிசர்வ் வங்கி தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை..
0 Comments