Tamil Sanjikai

தமிழகத்தில் மட்டும் 2018-19-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 757.34 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஒரு ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டு நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும், ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தாமல் போலி பில்களை காட்டி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். ஜிஎஸ்டி சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் அடிக்கடி அதிரடிச் சோதனை நடத்தி வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

இது குறித்து மாநிலம் வாரிய நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர், நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 148 ஜிஎஸ்டி வரிஏய்ப்புகள் நடந்துள்ளது, இவற்றின் மதிப்பு 757.34 கோடியாகும். இதில் 101 வழக்குகளில் 426.47 கோடியை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சென்னையில் போலியான இன்வாய்ஸ்களை ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் அளித்து முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவன இயக்குநர்கள் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், தமிழக அரசு கேபிள்டிவி கழகத்துக்கு செட்டாப் பாக்ஸ்களை சப்ளை செய்து வரும் கோவையில் உள்ள மந்த்ரா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது கடந்த ஜூலை மாதம் வரி ஏய்ப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடுமுழுவதும் 3 ஆயிரத்து 196 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 12 ஆயிரத்து 766.85 கோடியாகும். இதில் 2 ஆயிரத்து 634 வழக்குகளில் 7 ஆயிரத்து 909.96 கோடி மீட்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு 3 ஆயிரத்து 898.72 கோடிக்கும், உத்தரப்பிரதேசத்தில் 998.62 கோடிக்கும், கர்நாடக மாநிலத்தில் 844.17 கோடிக்கும், குஜராத் மாநிலத்தில் 548.16 கோடிக்கும் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என மத்திய அமைச்சர் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment