Tamil Sanjikai

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை இந்தியா, செவ்வாய் முதல் அமல்படுத்தியுள்ளது.

பாதாம், வால்நட், பருப்பு வகைகள் உள்ளிட்ட 28 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை முறையே 25 சதவீதமாகவும் 10 சதவீதமாகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்க அதிகரித்தது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட், பருப்பு வகைகள், கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக் கடலை ஆகிய பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது.

உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் எனவும், விவசாயப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது.

ஆனால், அமெரிக்கா தனது முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் உறுதியாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருள்கள் மீதான வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித்து அதை அமல் படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment