இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஹோன்டா நிறுவனம் இருக்கிறது. ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் மட்டும் சுமார் 2.5 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இத்தனை ஸ்கூட்டர்களை ஒரே நிறுவனம் விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறை. ஹோன்டா நிறுவனம் இந்த மைல்கல் விற்பனையை கடந்த 17 ஆண்டுகளில் கடந்து இருக்கிறது. முன்னதாக ஒரு கோடி ஸ்கூட்டர் விற்பனையை ஹோன்டா 13 ஆண்டுகளில் கடந்த நிலையில், அடுத்த ஐம்பது லட்சம் விற்பனையை வெறும் நான்கே ஆண்டுகளில் கடந்து இருக்கிறது.
ஸ்கூட்டர்களுக்கான சந்தையை உருவாக்குவதோடு, இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்க ஹோன்டா ஆக்டிவா இந்தியர்களின் பயணத்தை மாற்றியமைத்தது. இந்தியாவில் ஹோன்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை 18 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அறிமுகமான சமயத்தில் ஸ்கூட்டர் சந்தை 10 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்சமயம் 32 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு இரண்டாவது ஸ்கூட்டராக ஹோன்டா மாடல் இருக்கிறது.
இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஹோன்டா நிறுவனம் 57 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. இன்றும் 125சிசி பிரிவில் ஹோன்டா ஆக்டிவா அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.எங்கள் பிரான்டு மீது 2.5 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என ஹோன்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments