Tamil Sanjikai

நிறுவன உரிமையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, இனி ஜிஎஸ்டி பதிவெண்ணை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 35 -ஆவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின்னர், அவரது தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் தெலங்கானா, கர்நாடகா மற்றும் மிசோரம் மாநில நிதியமைச்சர்களை தவிர அணைத்து மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே செய்தியாளர்களிடம் கூறியது:

ஓர் நிறுவனம் ஜிஎஸ்டி பதிவெண்ணை பெற, தற்போதைய நடைமுறையில் அதன் உரிமையாளர் பல்வேறு ஆவணங்களை அளிக்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில், நிறுவன உரிமையாளர்கள் தங்களது ஆதார் எண்ணைக் கொண்டே ஜிஎஸ்டி பதிவெண்ணை ஆன்-லைனில் இனி பெறலாம்.

ஜிஎஸ்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச ஆண்டு வர்த்தகத்தை 20 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரித்து, சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கேற்ப, ஜிஎஸ்டி சட்டத்தில் தற்போது உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் முகவர்கள், காலாண்டுக்கு ஒருமுறையும், 5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் முகவர்கள்,மாதந்தோறும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இன்று முதல் முறைப்படி அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி ஆண்டுக்கு கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30 -ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment