Tamil Sanjikai

கோவையில், ஒரு கிலோ சின்னவெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி விவசாயிகள் சின்ன வெங்காயத்தை ஒரு கிலோ ஒரு ரூபாய் எனவும் ஒரு கிலோ வாங்கினால், ஒரு கிலோ இலவசம் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விற்பனை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர். யாருக்கும் பலனில்லாமல் வெங்காயத்தை சாலையில் கொட்டி போராடுவதை விட, விளைவித்த வெங்காயத்தை பொதுமக்கள் பயன்படுத்தட்டும் என்ற நோக்கில் விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகள் கூறினர். இதனையடுத்து விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

சமீபத்தில் 750 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த ரூ.1000 பணத்தை, மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர், பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து நூதனமாக தனது எதிர்ப்பை தெரியப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment