அமெரிக்காவின் பொருளாதாரத் தடையையும் மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்திய ரூபாயின் மூலமே செலுத்தி இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது இந்தியா.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாட்டுடன் எந்த நாடும் வர்த்தகம் மேற்கொள்ளக்கூடாது என இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தடை விதித்தது. ஆனாலும் இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக ஈரானுடனான வர்த்தகத்திற்கு விதித்த தடையை ஓரளவுக்கு தளர்த்தியது அமெரிக்கா.
உலகின் 3வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் இந்தியா, ஈரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தினை தொடர்ந்து மேற்கொள்ள காரணம், இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் போக்குவரத்து செலவினை ஈரான் ஏற்கிறது. மேலும் அதற்கான பணத்தினை அளிக்க நீண்டகால நேரத்தையும் அளிக்கிறது. அதே போல இந்தியாவுக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயின் மதிப்பிலே பெற்றுக்கொள்ளவும் சம்மதித்துள்ளது.
இதற்காக ஈரானோடு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஈரானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை யூகோ வங்கியின் மூலம் ஈரானில் உள்ள 5 வங்கிகளில் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் வங்கிகளில் பணம் செலுத்தி கச்சா எண்ணெய் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை உடைத்தெறியப்பட்டுள்ளது.
ஈரானுடனான வர்த்தக உறவில் மேலும் ஒரு மைல்கல்லாக அந்நாட்டு வங்கியின் கிளை மும்பையில் திறக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதே போல இந்தியாவின் யூகோ வங்கியின் கிளை ஈரானில் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை மூலம் இருநாட்டு வர்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments