இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது தனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது, வளர்ச்சிக்காகத்தான் காஷ்மீர் பிரிக்கப்பட்டதாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, காஷ்மீரை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக போடப்பட்ட திட்டம்தான் இது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக எடுத்த முடிவு என கூறிய மோடி, காஷ்மீரில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மோடியின் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்துள்ளார் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரரான முகேஷ் அம்பானி. காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்காக சிறப்பு குழுக்களை அமைத்து புதிய பலதிட்டங்களை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் அம்பானி. இதற்காக சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை அங்கு முதலீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மோடியின் வேண்டுகோளுக்கு முதலில் டாடா போன்றவர்கள் செவிகொடுத்தாலும், காஷ்மீருக்காக முதலீடு செய்யப்போவதாக அம்பானி அறிவித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படும் என அறிவித்த பத்து நாட்களுக்குள்ளாகவே வந்திருக்கும் இந்த அறிவிப்பு. இப்படியான விமர்சனப்பார்வை ஒரு புறமிருந்தாலும், அம்பானியின் வருகை காஷ்மீர் இளைஞர்களுக்கு விடியலாக இருக்கக்கூடும் என்றும் சிலர் கருதுகிறார்கள். காஷ்மீருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அம்பானி
குறைந்த சேவை கட்டணத்தில் விநாடிக்கு 1 ஜி.பி வேகம்கொண்ட அதிவேக இணைய சேவையான ஜியோ பைபர் செப்டம்பர் 5ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தொடக்க சலுகையாக ஜியோவின் ஆயுட்கால சந்தாதாரர்களுக்கு 4கே ரெசல்யூஷன் கொண்ட டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். இந்த ஜியோ பைபர் சேவையை 1600 நகரங்களில் உள்ள சுமார் 20 கோடி இல்லங்களிலும், 1.5 கோடி தொழில்நிறுவனங்களிடம் கொண்டுபோய் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்த போதிலும், அடுத்த சில மாதங்களில் காஷ்மீரில் அம்பானியால் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 Comments