Tamil Sanjikai

குப்பத்துப் பையனான பாலா வட்டி குமார் என்னும் கந்து வட்டி ரவுடியிடமிருந்து மூன்று லட்சம் பணம் வாங்கிக் கட்ட முடியாமல் திணறுகிறான். தான் காதலிக்கும் பெண் தன் பெற்றோருடன் பாலா வீட்டிற்கு சம்மந்தம் பேச வருகிறாள். அப்போது வட்டிகுமார் அங்கு வந்து பாலாவை மிரட்டுகிறான். அடுத்த நாள் பாலாவுக்கும் அவனது காதலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் நிச்சயதார்த்தத்தை வட்டிகுமார் நடத்த விடமாட்டேன் என்று சொல்லவே பாலாவுக்கு நிலைமை சிக்கலாகிறது.

வேறு வழியேயில்லாமல் ஆளில்லாத வீடு ஒன்றில் திருடப்போகிறான் பாலா. போன இடத்தில் நாய் ஒன்றிடம் சிக்கித் தவிக்கும் பாலா, நாய்க்குப் பயந்து வீட்டிற்குள்ளே போகிறான். அங்கோ நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. அது ஒரு ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி யின் வீடு. அங்கு அந்த டி.ஐ.ஜியைக் கொல்வதற்காக சிறையிலிருந்து தப்பித்த ஐந்து தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளும் பாலா தப்பித்தானா ? அவன் தன்னுடைய கடனை எப்படி அடைத்தான் ? வட்டி குமார் பாலாவை என்ன செய்தான் ? பாலாவின் நிச்சயதார்த்தம் நடந்ததா ? என்பது பரபரப்பான மிச்சக் கதை....

இயக்குனர்.விஜய் இயக்கத்தில் ஜி‌. வி. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் வாட்ச்மேன். முதல்காட்சியில் சாதாரணமாக என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த காட்சியில் சிக்சர் அடித்திருக்கிறார் ஜி.வி. நாய்க்குப் பயந்து ஒடும் காட்சிகள் அசத்தல். அந்தச் சிக்கலான வேளைகளிலும் உடைந்து போன போனை எடுத்து மாற்றி மாற்றி பேசும் காட்சிகள் சூப்பர். நடிப்போடு , பின்னணி இசையிலும் ஜி.வி.பிரகாஷ் உழைத்திருக்கிறார்.

படத்தில் ஒரு முக்கிய Trap & Twist ஆக ஜி.வியின் நிச்சயதார்த்தம் இருப்பதால் பேருக்கு ஒரு ஹீரோயினாக சம்யுக்தா ஹெக்டே ஓரிரு காட்சிகளில் நடித்திருக்கிறார். இருந்தாலும் கவனிக்கப்பட வேண்டிய கண்களால் பேசும் கதாநாயகி.

ஓய்வு பெற்ற டி.ஐ.ஜியாக சுமன். தீவிரவாதிகள் தன் வீட்டில் நுழைந்து விட்ட அசாதாரண சூழலைக்கூட அசாத்தியமாகக் கையாளும் உடல்மொழி அருமை. அலட்டிக் கொள்ளாமல் ஸ்கோர் செய்திருக்கிறார்.

யோகிபாபுவுக்கு கால்ஷீட் பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஒரு ஃப்ளேவருக்காக சேர்த்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இரண்டு நாட்கள் மட்டுமே வந்து நடித்துக் கொடுத்தது போலிருக்கிறது. அதுபோலவே முனீஸ்காந்த்.

படத்தின் முக்கியமான இன்னொரு கதாநாயகன் நிரவ்ஷா. பெரும்பாலும் இருட்டிலேயே எடுக்கப் பட்டுள்ள படம் என்றாலும் சஸ்பென்சைத் தக்க வைத்துக் கொள்ள அவரது கேமரா கைகொடுத்திருக்கிறது. மிரட்டலான கோணங்கள் அசரவைக்கின்றன. சண்டைக்காட்சிகளும் மிரட்டல்.

ஜெயிலிலிருந்து தப்பிய முக்கியமான தீவிரவாதிகள் அந்த வண்டியில் ஏதோ ஊட்டிக்கு சுற்றுலா போவதுபோல ஜாலியாய் வந்திறங்குவது, அந்த வீட்டுக்குள் அதுவும் விதவிதமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு அத்தனை மணிநேரம் ஒருவரைத் தேடித்திரிவதெல்லாம் கொஞ்சம் ஓவர். இரவில் குண்டடி பட்டுவிட்டு, ஏதோ கொசுக்கடி பட்டது போல காலையில் நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி நிற்பதெல்லாம் அசத்தல் ரக லாஜிக் ஓட்டை. இம்மாதிரி சிறுசிறு குறைகள்தான்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தின் டிரெய்லரிலேயே கதையின் முக்கியத்துவம் காட்டப்பட்டுவிட்டதால் தியேட்டரில் பெரிய சஸ்பென்ஸ் ஒன்றுமில்லை. அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்க முடிகிறது. அடுத்த படத்துக்கு டிரெய்லர் கட் பண்ணுங்கள்... ஹைலைட்ஸ் கட் பண்ணி யூடியூபில் போடுவதற்கு பதிலாக தமிழ்ராக்கர்சுக்கே கொடுத்துவிடலாம். அவர்களே நிராகரித்துவிட வாய்ப்புண்டு.

கொஞ்சம் பட்டி, டிங்கரிங்க் பார்த்திருந்தால் நல்லவொரு திரில்லர் படமாக அமைந்திருக்கும். படத்தில் முக்கியமான இன்னொரு கதாபாத்திரம் உண்டு. பெயர் ப்ரூனோ... செம்ம கேரக்டர்.... திரையில் பாருங்கள்.

வாட்ச்மேன் – மெரீனா பீச்சுக்கு....

0 Comments

Write A Comment