Tamil Sanjikai

தேனி மாவட்டத்திலுள்ள கொடுவிளார்பட்டி என்னும் கிராமத்தினர் இரண்டு பிரிவாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தங்கள் ஊரில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா குறித்து ஆலோசிக்கின்றனர். அதில் ஒரு பிரிவினர் நடத்த வேண்டுமெனவும், மற்றொரு பிரிவினர் நடத்தக் கூடாது எனவும் விவாதம் செய்கின்றனர். அப்போது அந்த ஊரிலுள்ள தூக்குதுரை என்னும் முக்கியஸ்தர் வந்து சமாதானப்படுத்தி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்கிறார். பந்தக்கால் நடும்போது அனைவரும் ஜோடியாக வந்து மரியாதை செய்யும் போது தூக்குதுரை மட்டும் தனித்து நிற்கவே அவரது குடும்பத்தினர் வந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கிணங்க பிரிந்து போன தூக்குதுரையின் மனைவி நிரஞ்சனா மும்பையில் இருப்பதாகவும், அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர தூக்குதுரையும், அவரது உறவினர்கள் இருவரும் ரயிலில் மும்பை புறப்படுகிறார்கள். அப்போது ஃபிளாஷ்பேக் வருகிறது.

அதில் தூக்குதுரை ஊருக்குள் சண்டியராக வளம் வருகிறார். ஊரில் இலவச மருத்துவ முகாம் நடத்த மருத்துவர்.நிரஞ்சனா தலைமையில் மருத்துவக் குழு ஊருக்கு வருகிறது. வரும்வழியில் தூக்குதுரை ரெண்டு மூன்று பேரை வழியில் வைத்து அடிக்கிறார். அதில் மருத்துவக் குழுவின் வண்டி சேதமாகிறது. நிரஞ்சனா தூக்குதுரையின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்கிறார். தூக்குதுரைக்கும், நிரஞ்சனாவுக்கும் நிகழும் மோதலும், காதலுமாக இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கிறது. ஒருநாள் நடக்கும் சண்டையில் அந்தக் குழந்தையின் மீது கத்திக்குத்து விழுகிறது. இதில் ஆத்திரமடையும் நிரஞ்சனா தூக்குதுரைக்கு குட்பை சொல்லிவிட்டு மும்பை செல்கிறார். மேலும் தன்னையும் குழந்தையையும் வந்து சந்தித்தால் தான் இறந்து விடுவதாகச் சொல்லிச் செல்கிறாள். அதனால் பன்னிரண்டு ஆண்டுகள் தூக்குதுரை தன்னுடைய மனைவியையும், மகளையும் பிரிந்து வாழ்கிறார்.

ஃபிளாஷ்பேக் முடிந்து நிகழ்காலத்து வரும்போது ரயில் மும்பை வந்து விடுகிறது. நிரஞ்சனாவின் அலுவலத்திற்கு செல்லும் தூக்குதுரையை சந்திக்க நிரஞ்சனா மறுத்துவிடுகிறாள். தன்னுடைய மகளைக் காண வரும் தூக்குதுரையிடமிருந்து மகளை விலக்குகிறாள். மனமுடைந்த தூக்குதுரை ஊருக்கு ரயிலேறப் போகும்போது, ஒரு கும்பல் அவரது மகளைக் கொல்லத் துரத்துகிறது. அந்தக் கும்பல் யார்? தூக்குதுரையின் மகளை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்? தூக்குதுரை அவரது மகளைக் காப்பாற்றினாரா? இந்த இடத்தில் இடைவேளை விடுகிறார்கள். இடைவேளைக்குப் பின் கதை வேறுதளத்தில் பயணிக்கிறது.

வெள்ளைத் தலைமுடி, தாடி மீசையோடு ஒருவர் ரசிகர்களின் ஆக்ரோஷக் கைத்தட்டல்களோடு திரையில் உதிக்கிறார் என்றால் உண்மையில் அஜீத்குமார் பாராட்டுக்குரியவர். புகை மற்றும் மதுப்பழக்கம் உடலுக்கு நல்லதில்லை என்று டைட்டில் கார்டில் தனிப்பட்ட முறையில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு, தன்னுடைய பெயருக்கு முன்னால் எந்தவிதமான அடைமொழியும் இன்றி வெறும் ‘அஜித்குமார்’ என்று போட்டிருப்பது சிறப்பு. நடை, உடை மற்றும் ஸ்டைலில் அஜித்குமார் அட்டகாசமாகத் தெரிகிறார். பிளாஷ்பேக்கில் காட்டும் சேட்டைகள் அஜீத்குமாருக்கு கொஞ்சம் ஒட்டவில்லை என்றாலும் அஜித்குமார் அழகாக இருக்கிறார்.

ஃபார்முலா ஒன் கார் மற்றும் பைக் ரேசர், உச்ச நடிகர்களில் ஒருவர், அதிகபட்ச அறுவை சிகிச்சைகளுக்கு தன்னுடைய முதுகெலும்பை ஆட்படுத்தியவர், என்பதைத் தாண்டி அதிகம் தடவை இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு தன்னுடைய நெஞ்சைக் காட்டியவர் அஜீத் குமார்தான் அன்றால் அது மிகையில்லை.

எந்த சினிமா பின்புலமுமின்றி தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி இளம்பெண்களின் இதயத்தை தனதாக்கிக் கொண்டு, இளைஞர்களின் ஹீரோவாக வளம் வந்த அஜீத்குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி, பரமசிவன், ஆழ்வார், அட்டகாசம், ஜி என்று தொடர் மொக்கைகளைக் கொடுத்து அவரது ரசிகர்களை வெறுப்பேற்றியது நினைவிருக்கலாம். ஆனால் பில்லா படத்துக்குப் பிறகு அவரது வளர்ச்சி இன்னும் எகிறியது. அதற்குப்பின் மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால் என்று வரிசையாக ஹிட் கொடுத்தார். அப்புறம் இயக்குனர் சிறுத்தை சிவாவோடு இணைந்து வீரம் என்று ஒரு படம் நடித்ததில் துவங்கியது வினை. வேதாளம், விவேகம் என்று தொடர் மொக்கைகளைத் தொடர்ந்து இப்போது விஸ்வாசம் வரை வந்து நிற்கிறது.

 

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் மனிதர் என்பதால் மட்டுமே அவருக்கு நிறைய ரசிகர் பட்டாளம் இருப்பது கண்கூடு. அதற்காக மட்டுமே அஜீத்தின் படங்களைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. பிள்ளைகளை குறிப்பாக பெண்பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டிய படத்தை இப்படியா மீசைக்காரர்கள், அரிவாள்கள், ரத்தம், அடிதடி சகிதம் கதை சொல்ல வேண்டும்?

இயக்குனர் சிவாவுக்கு ஒரேயொரு வேண்டுகோள். விட்ருங்க! பாவம் அந்த மனிதர்! கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் படம் வேணும்னாலும் எடுத்துக்கோங்க! ஆனால் போரடிக்காமல் படம் எடுங்கள். முதல் பாதியில் கடுப்புதான் வருகிறது. ஃபிரேம் முழுக்க ஆளாளுக்கு எதையோ சுமந்துகொண்டு செல்கிறார்கள். கூட்டம் கூட்டமாய் அலைகிறார்கள், வசனம் பேசுகிறார்கள். ஒரே மாதிரியான படம் எடுக்கலாம். அதற்காக ஒரேமாதிரியான காட்சிகளையா எடுப்பீர்கள்.

கதாநாயகன் அறிமுகக் காட்சியில் கார் டயரைக் காட்டுவது, ஸ்டியரிங்கைக் காட்டுவது, காலைக்காட்டுவது, வாயைக் காட்டுவது என்று எத்தனை நாள் இப்படி காட்டு, காட்டென்று காட்டுவீர்கள்? போலீஸ் ஸ்டேஷனில் சென்று குடும்பத்தோடு உட்கார்ந்து வெங்காயம் நறுக்குவது, சுக்கு காப்பி போட்டுக் குடிப்பது என்று கடுமையான சிந்தனை வளம்.

முரட்டு மீசைகளோடு அரிவாள், கத்தி, வெட்டுகுத்து, பங்காளிச் சண்டை என்று படிப்பறிவில்லாமல் திரியும் குறிப்பிட்ட சில மனிதர்களைத் திரையில் காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது இயக்குனரே? அவர்களையும் கல்வியறிவு பெற்றவர்களாய்க் காட்டுங்கள். அந்தக் குறிப்பிட்ட மனிதர்களைத் தொடர்ந்து இப்படியே சித்தரித்து, அதை அடுத்து வரும் அவர்களது தலைமுறையினர் யாராவது பின்பற்றினால் அது நீங்கள் அந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமே ஆகும்.

இரண்டாம் பாதி பயங்கரம். ஜகபதி பாபு ஒரே கெட்டப்பில் ஒரு மூட்டை படங்களில் நடித்து விட்டார் போல. சண்டை சத்தம் காதைக் கிழிக்கிறது. கடைசியில் எல்லாமே மெடிக்கல் மிராக்கிள் ரேஞ்சில் நடந்து, முடிந்து எண்டு கார்டுக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் என்னும் முக்கியக் குறிப்பை எழுதிவிட்டு வெளியில் வந்துவிட வேண்டும். சிறப்பு!

படத்தின் ஒரே ஆறுதல் நயன்தாரா. நிரஞ்சனா என்று ஆசையாய்க் கொஞ்சத் தோன்றுகிறது. நடிப்பில் நல்ல முதிர்ச்சி, முகம் முதிர்ச்சியடையாமல் இருப்பது ஆச்சர்யம். குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லுமிடத்தில் ஒரு டாக்டராக இருந்து கொண்டு, தவித்தபடி அந்த டாக்டர் பாத்திரத்தை அழுது கொண்டே தக்க வைத்துக் கொள்வது சிறப்பான நடிப்பு. தான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாமல் கணவன் ஒரு விபத்தில் சிக்கிக் குழந்தைக் காயமடைந்ததைக் காரணம் காட்டி, தான் அத்தனைக் காதலித்த கணவன் சொல்ல வரும் விஷயத்தைக் கேட்காமல், அவனுக்கு அத்தனை பெரிய ஆயுள் தண்டனையைக் கொடுப்பதெல்லாம் திரைக்கதையின் மிகப்பெரிய கவன வறட்சி. இரண்டாம் பாதியில் மிடுக்கான நடிப்பு.

மகள் ஸ்வேதாவாக வரும் அனிகா நல்ல நடிப்பு. யோகிபாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா என்று ஆட்கள் இருந்தும்கூட நகைச்சுவைக்கு ஆகப்பெரிய குறைபாடு.

சிவா படத்தின் சண்டைக்காட்சிகள் எப்போதுமே மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. விஸ்வாசத்திலும் அவர் குறை வைக்கவில்லை. அஜித் ரசிகர்கள் கைத்தட்டி ரசிக்கிறார்கள். திலீப் சுப்பராயன் வெளுத்துக் கட்டியிருக்கிறார். அவ்வளவு சண்டையும் அனல் பறக்கிறது.

நயன்தாரா பெரிய அளவில் ஆடவில்லை என்பதாலும், அஜித்துக்கு பெரிய அளவில் நடன அசைவுகள் தேவைப்படாது என்பதாலும் நடந் இயக்குனருக்கு வேலை குறைச்சல்தான். ஆனாலும் பிருந்தா மாஸ்டர், கல்யாண் மாஸ்டர், அசோக் ராஜன் மாஸ்டர் என்று மூன்று பேர் வேலை செய்திருக்கிறார்கள்.

வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டர் ரூபன் கொஞ்சம் கோபக்காரர் போலும்...

இமான் இசையில் சிட் ஸ்ரீராம் குரலில் கண்ணான கண்ணே, ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல் குரலில் வானே! வானே! ஆகிய இரண்டு பாடல்கள் மட்டும் அருமை. மீதமுள்ள பாடல்கள் இசைக்கூச்சல்.

அளவுக்கு அதிகமாகக் கோபப்பட்டு விட்டு கணவனைப் பிரிந்து, தாய்வீட்டுக்குச் செல்லும் இன்றைய தாய்மார்கள் மத்தியில் பெண்பிள்ளைகளுக்கு தகப்பன் என்னும் உறவு முறை எவ்வளவு முக்கியமான ஒரு தேவை என்பதை இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாம். இத்தனை ரத்தம் சிந்தியிருக்க தேவையில்லை. அஜித்குமார் அடுத்தமுறை கதை கேட்கும்போது ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு ஒப்புதல் அளிக்கலாம். அப்படிச் செய்வதே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.

விஸ்வாசம்! ரசாபாசம்!

0 Comments

Write A Comment