Tamil Sanjikai

படத்தின் முதல் காட்சியில் மாயா எனும் இளம்பெண்ணை நான்கு பேர் கொண்ட குழு கடத்தி வந்து ஒரு டீக்கடையில் வைக்கிறது. அவளிடம் விசாரிக்கிறார்கள். அவள் தானொருவனைக் காதலித்ததாகவும் , ஆனால் அவன் தன்னுடைய தாயை கரெக்ட் செய்தான் என்று சொல்கிறாள் அவளுடைய சொல்லாடலில் கதை விரிகிறது.

ரகுநந்தன் என்றொரு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் வசிக்கிறார். உலகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளின் உரிமையாளர் அவர். அவரது சொத்துகளுக்காக அதன் பங்குதாரர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அதை ரகுநந்தனின் மகன் வயிற்ருப் பேரன் முறியடிக்கிறான்.

அப்படியிருக்கையில் அவரது எண்பதாவது வயது நெருங்குவதையொட்டி தன்னைவிட்டுப் பிரிந்து போன தனது மகள் நந்தினியைக் கூட்டி வருமாறு தனது பேரன் ஆதியிடம் கோரிக்கை வைக்கிறார். அவனும் தன்னுடைய தாத்தாவுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு தனது பரிவாரங்களுடன் இந்தியா வருகிறான். வருகிற இடத்தில் தன்னுடைய அத்தை நந்தினிக்கு தொழிலில் ஏகப்பட்ட நஷ்டங்கள் என்று தெரிய வருகிறது. ஏர்போர்ட்டில் வைத்து தன்னுடைய மாமா பிரகாஷைப் பார்த்து அவரைப் பின் தொடர்கிறான். காரில் போய்க்கொண்டிருக்கும் பிரகாஷுக்கு வழியில் மாரடைப்பு ஏற்படுகிறது.

பிரகாஷைக் காப்பாற்றிய ஆதிக்கு பிரகாஷ் வீட்டிலேயே டிரைவர் வேலை கிடைக்கிறது. ஆதி தன்னுடைய பெயரை ராஜா என்று மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி வேலை செய்கிறான். தன்னுடைய அத்தைக்கு நிறைய நன்மைகளை மறைமுகமாகச் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய அத்தைக்கு இரண்டு அழகான மகள்கள் இருக்கிறார்கள். மூத்தவளைக் காதலிக்கத் திட்டம் போடும் ராஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கிறான். இளையவள் கொஞ்சம் சண்டைக்கோழி. டைப் ஆரம்பத்திலேயே முட்டலும் மோதலுமாக இருக்கிறாள்.

இந்நிலையில் நந்தினிக்கு இங்கே வந்திருப்பது தன்னுடைய மருமகன்தான் என்று தெரிய வர கோபமடைகிறாள். இதற்கிடையில் அங்கே வேறொரு பிரச்சினை முளைக்கிறது. என்ன நடந்தது? ஆதி தன்னுடைய அத்தையை மனம் மாற்றினானா? வந்த நோக்கம் நிறைவேறியதா? அந்த பிரச்சினையை சமாளித்தானா? என்பது மிச்சக் கதை.

இயக்குனர் சுந்தர் சி ஸ்டைலில் வெளிவந்திருக்கும் அக்மார்க் சிம்பு படம். சிம்புவுக்காகவே எழுதப் பட்ட கதை போல இருக்கிறது. சீனுக்கு சீன் சிம்புதான் இருக்கிறார். வழக்கம் போலவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளம் படத்தில் இருக்கிறது. ஆனாலும் காமெடியை விட செண்டிமெண்டே முன்னால் இருக்கிறது.

சிம்பு ஒரு நல்ல நடிகர் என்பது ஏற்கனவே தெரியும். ஆதலால் அதைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆதி கதாபாத்திரத்தில் சிரிக்கிறார், காதல் செய்கிறார், சண்டை போடுகிறார், அழுகிறார், கோபப்படுகிறார் என்று கிடைத்த இடத்திலெல்லாம் சிக்சர் அடிக்கிறார். ரொம்ப காலத்திற்குப் பிறகு விரல் வித்தை மற்றும் பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையையே சுயபகடியாகவும், தன்னுடைய காதல் தோல்விகளையும், சமகால அரசியல் வேடிக்கைகளையும் டயலாக்கில் சேர்த்துக் கொண்ட சிம்புவைப் பாராட்டத்தான் வேண்டும்.

படத்தின் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணனுக்குத்தான் மெயின் கேரக்டர் என்றாலும்கூட அவரது முக்கியத்துவம் திரையில் கொஞ்சம்தான். பிரபு வழக்கம்போல பணக்கார தோற்றம். இருபது வருடங்களாக ஒரே சாயலிலேயே இரண்டு பேரும் தோன்றுவது உறுத்தல். ரம்யாகிருஷ்ணனின் வயது தெரிகிறது.

யோகிபாபு, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், விஜய் டீவி ராமர், சிங்கமுத்து என்று பெரிய நகைச்சுவை பட்டாளமே இருந்தாலும்கூட நகைச்சுவையில் மிகப்பெரிய வறட்சி. லாஜிக்கை மறந்து விடவேண்டும் என்பதுதான் இயக்குனர் நமக்கு வைக்கும் முக்கியமான வேண்டுகோள்.

உள்ளத்தை அள்ளித்தா காலத்திலிருந்தே ஒரே டெம்ப்ளேட்டை வைத்து இன்று வரை அலுக்காமல் கதை சொல்லிக் கொண்டிருக்கும் இயக்குனர் சுந்தர்.சி உண்மையிலேயே ஒரு ஆச்சர்யமான மனிதர்தான். சண்டைக்காட்சிகள் அருமை என்று சொல்லலாம். ஆனாலும் கூட படத்தில் எப்போதும் யாராவது ஒருத்தர் யாரையாவது அடித்துக் கொண்டே இருப்பதும், படம் முழுவதும் தன்னோடு இருக்கும் ஆட்கள் உட்பட எதிர்ப்பவர்கள் என்று எல்லாரையும் அடித்துத் துவைக்கும் சிம்பு கிளைமாக்சில் அன்பு குறித்துப் பாடம் எடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

கதாநாயகிகள் மேகா ஆகாஷ் மற்றும் கேதரின் தெரசா அழகு. கவர்ச்சியும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய சுந்தர் சி படத்தில் கொஞ்சம் ஆபாச டயலாக்குகள் துருத்திக் கொண்டு நிற்கின்றன.

சுமன், மகத், நாசர் என்று கொஞ்சம் நடிகர்கள் தூவப் பட்டிருக்கிறார்கள். பாவம் ராதாரவி. இயக்குனருக்கு என்ன கோபமோ! புரட்டியடித்து விபூதியடித்து விட்டிருக்கிறார்.

பாடல்கள் படு சுமார். பின்னணி இசை பரவாயில்லை. ஹிப் ஹாப் தமிழா இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம். ஒளிப்பதிவு நன்று! நகைச்சுவைக்காக இல்லையென்றாலும் சென்டிமெண்டில் ஊற வைத்து ஆடியன்சை உட்காரவைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. வந்தா ராஜாவாதான் வருவேன். ஒருமுறை வந்து பார்க்கலாம்.

0 Comments

Write A Comment