Tamil Sanjikai

வடசென்னைப் பகுதியின் வழக்கமான கேங்க்ஸ்டர் படம்தான் வடசென்னை என்றாலும் சமீபத்திய அரசியலின் குடிமக்களின் மீதான கடும்போக்கை முன்னிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.வெற்றிமாறன்.

தன்னுடைய ஊருக்காகவும், ஊர்மக்களுக்காகவும் அரசாங்கத்தின் அராஜகத்தை எதிர்த்து தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து, தன்னுடைய சகாக்களால் கொலை செய்யப்படும் ராஜன் என்னும் மனிதனின் மனைவி சந்திரா , தன் கணவனின் சாவுக்காகப் பழிவாங்கும் படலமே கதை. ஆனால் கதை சொல்லியிருக்கும் விதம்தான் அட்டகாசம்.

செந்தில், குணா என்னும் இரண்டு ரவுடிகளுக்குள் பகை நிமித்தம் மோதல் நிலவி மாறிமாறி சிறைக்குச் செல்வதும், வருவதுமாக கொலையும் கையுமாக இருக்கிறார்கள். அப்போது ஒரு தெருச்சண்டையில் கைதாகி, அப்பாவியாக ஜெயிலுக்கு வரும் அன்பு என்னும் இளைஞனை ஒரு கும்பல் சிறையில் வைத்து கொலை செய்ய முயற்சிக்கிறது. ஒரு கட்டத்தில் ரவுடி செந்திலை அன்பு கொலை செய்ய முயற்சிக்கிறான். அதில் செந்தில் நிரந்தர ஊனமடைகிறான். அதன் பின்னணியில் ரவுடி குணா இருக்கிறான்.

தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய குணாவுக்கு விசுவாசமாய் இருக்கிறான் அன்பு. தன்னுடைய ஊர் மக்களுக்கும், தன்னுடைய ஊருக்கும் அரசாங்கத்தாலும், தன்னோடே கூட வாழும் அரசியல்வாதிகளாலும் ஆபத்து வரும் நிலையில் குணாவை எதிர்க்கிறான் அன்பு. அன்புதான் செந்திலைக் கொல்ல முயற்சித்தான் என்பதை குணா செந்திலிடம் சொல்லவே செந்திலின் ஆட்களும், குணாவின் ஆட்களும் சேர்ந்து அன்பை கொலை செய்யத் துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து அன்பு தப்பித்தானா? என்பதுதான் மிச்சக்கதை.

இயக்குனர்.வெற்றிமாறனின் மற்றுமொரு ஆய்வுக்கட்டுரையின் திரை வடிவமே தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை திரைப்படம். சிறையில் நடக்கும் போதைப்பொருள் மற்றும் ஆயுதப் புழக்கம், வில்லங்கங்கள், ரவுடியிசம், கோஷ்டி மோதல், சிறை அரசியல் என்று ஒரு மிகப்பெரிய Database தயார் செய்து விட்டு திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்த நூற்றாண்டின் கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர்களின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் வெற்றிமாறன். நிறைய Detailகளோடு நிகழ்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையில் விழும் முடிச்சுகளும், அவிழ்தலுமாக படம் பறக்கிறது. Non - Linear முறையில் கதை சொல்லப்பட்ட விதம் சிறப்புதான் என்றாலும் கூட அதுவே சில இடங்களில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. அத்தியாயம் , அத்தியாயமாக நகரும் படமும், அதில் வரும் கதாபாத்திரங்களுமாக திகைக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும் கூட வடசென்னை என்பது அத்தனை குரூரமான மனிதர்களோடா உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது? எல்லார் கையிலும் ஆயுதங்கள் !

ஆரம்பக்காட்சியில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு,ஜெயிலுக்கு வரும் தனுஷ் சக சிறைக்கைதிகளிடம் அடிவாங்கி, நொந்து போகும்போது பாவமாக இருக்கிறது. காட்சிகள் அப்படியே ரிவர்சில் ஃபிளாஷ் பேக்குக்கு போகும்போது மீசையில்லாத லவ்வர் பாய் தனுஷ், அப்புறம் மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்து விட்டு மீண்டும் ஃபிளாஷ் பேக்குக்கு போகும்போது தன்னுடைய காதலுக்காகவும், காதலியின் தம்பிக்காகவும், ஒரு மிகப்பெரிய ரவுடியிடம் கெஞ்சிய படியே கொலை செய்யும் போது ‘பக்’கென்றிருக்கிறது. மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்து முதிர்ச்சியாக நின்று ரவுண்டு கட்டியிருக்கிறார். நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷுக்கு வாழ்த்துகள்.

ராஜன் கேரக்டராக இயக்குனர்.அமீர் நடித்திருக்கிறார். சமகாலத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமும், அவர்களுக்கு ஆதரவாக ஆளும் அரசாங்கங்கள் கடைநிலை குடிமக்களின் வாழ்வாதாரத்தில் நிகழ்த்தும் அடிப்படைச் சுரண்டலை இந்தக் கதாபாத்திரம் பேசிக் கொண்டிருக்கிறது. வர்த்தகத் துறைமுகக் கட்டுமானம், சாகர்மாலா, மீதேன் , நியூட்ரினோ என எதிர்கால ஆபத்துக்களின் அசரீரியாக ஒலிக்கும் காட்சியமைப்புகள், சாமானியர்களின் வாழ்வாதாரமும், அடிப்படைப் பொருளாதாரமும் எப்படிப் பாதிக்கப்படும் என்பதை நெற்றி பொட்டில் அடித்துப் புரிய வைக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் திருப்தியான நடிப்பு, அடாவடியான , அன்பான மீனவக் குப்பத்துப் பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். பேச்சுவழக்கும் அபாரம். முத்தக் காட்சிகளில் தாராளம்.

எளிய மக்களின் வாழ்வியல் முறையை ஒவ்வொரு கதாபாத்திரமும் கடத்துகிறது. கிஷோர், சமுத்திரக்கனி, பவன், டேனியல் பாலாஜி, ராதாரவி , இயக்குனர்.சுப்பிரமணியம் சிவா என அனைவரின் நடிப்பும் சிறப்பு.

ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்திருக்கும் இளைஞன் சிறப்பு. திரைத்துறையில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

ஆண்ட்ரியா மிளிர்கிறார். அமீருடனான கூடல் காட்சிகளில் கவிதை. கணவனை இழந்து தவித்து, அழாமல் அமைதியாக பொருமும் காட்சிகளில் நிறைவு.

வேல்ராஜின் கேமரா விளையாடிருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் அற்புதம். ஃபிளாஷ் பேக்கில் 90 ஆம் ஆண்டு காலகட்டம் என்பதால் நிறைய விஷயங்களை மறைக்கவும், சேர்க்கவும் வேண்டிய கட்டாயம் இருக்கும் சூழல் இருப்பதால், மிகக் கவனமாக டாப் ஆங்கிள் செல்லும் கேமராவை Tilt Up செல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். லைட்டிங் அற்புதம்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி பிரமாதம். 'சந்தனத்த' பாடல் தாளம் போட வைக்கிறது. கோயிந்தம்மாள மற்றும் என்னடி மாயாவி நீ பாடல்கள் தரம். ஆனாலும் இன்னும் எத்தனை நாட்களுக்கு கரகர கானா பாலாவின் ஆலாபனையை கிட்டாரின் பிளக்கிங்கின் நடுவே கேட்க வேண்டியிருக்குமோ ? பாடல்கள் நலம்.

ஆர்ட் டைரக்டரின் பணி சிறப்பு. 90 களைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களும் கடந்த காலத்தை நினைவூட்டுகிறது. திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாகவும் , அசாத்தியமாகவும் இருக்கிறது.

இயக்குனரின் முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் கூட, வடசென்னை பாராட்டுதலுக்குரிய படம் என்பதை மறுக்க முடியாது.

0 Comments

Write A Comment