மாயா என்றொரு கேரளத்து இளம்பெண் சென்னையில் மருத்துவராக வேலை பார்க்கிறாள். அவளிடம் யாராவது ‘ஐ லவ் யூ’ என்று சொன்னால் ஒரு அமானுஷ் பேய் வந்து அவர்களைக் கொல்கிறது. கொன்றுவிட்டு அந்த பேயானது மலையாளத்தில் சொல்கிறது, இந்தப் பெண்ணை காதலிப்பவருக்கு மரணம் நிச்சயம் என்று....
ஆட்டோ ஓட்டும் விஜியும், அவரது மாமாவும் சதாகாலமும் தண்ணியடித்து விட்டு ஏரியாவில் சலம்பல் பண்ணிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் செய்யும் சேட்டையில் தெருவே அலறுகிறது.
இப்படியிருக்க அந்த தெருவில் வசிக்கும் டாக்டர் கார்த்திக் தன்னோடு பணிசெய்யும் டாக்டர் மாயாவிடம் ஐ லவ் யூ சொல்ல அந்த பேய் வந்து கார்த்திக்கைப் போட்டு பின்னி எடுக்கிறது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார் கார்த்திக்.
விஜியிடம் ஏகத்துக்கு வாங்கிக் கட்டிக் கொண்ட கார்த்திக்கு விஜியைப் பழி வாங்க ஒரு யோசனை பிறக்கிறது. அதன்மூலம் மாயாவை விஜியிடம் கோர்த்துவிடுகிறார். விஜியும் வழக்கம் போலவே மாயாவிடம் காதல் பிறந்து அவளிடம் தன்னுடைய காதலைச் சொல்ல பேய் என்ட்ரி கொடுத்து விஜியைப் போட்டு பொளக்கிறது. விஜியும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தேட கடைசியில் மாயாவின் அப்பா கேரளாவில் ஒரு மிகப்பெரிய மந்திரவாதி என்றும் அவர்தான் தன் மகளைப் பாதுகாக்க ஒரு துஷ்ட சக்தியை ஏவிவிட்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது.
அவரிடம் விஷயத்தைச் சொல்லி பெண் கேட்க விஜியும் அவரது மாமாவும் கேரளா செல்கிறார்கள். அங்கே போய் குடித்துவிட்டு பூஜை நடக்கும் இடத்தில் மந்திரவாதியான மாயாவின் அப்பாவை கலாய்க்கிறார்கள். கோபமடைந்த மந்திரவாதி ஆட்களை விட்டு விஜியை கொல்லச் சொல்கிறார். விஜிக்கு கேரளாவிலுள்ள ஒரு சேட்டன் அடைக்கலம் கொடுத்து ஒரு பெண்மந்திரவாதியிடம் அழைத்துச் செல்கிறார். இந்த விஷயம் தெரிந்த மாயாவின் அப்பா அந்தப் பெண் மந்திரவாதியை சந்திக்கிறார். விஜியை அடித்த அந்தப் பேயை தான் ஏவவில்லை என்று மாயாவின் அப்பா சொல்கிறார். அங்கு வரும் விஜி வீடியோ காலில் மாயாவிடம் ஐ லவ் யூ சொல்கிறார். அப்போது அங்கு அந்தப் பேய் வந்து விஜியை துவம்சம் செய்கிறது. இதைக்கண்டு அந்த ரெண்டு மந்திரவாதிகளுமே அதிர்ச்சியடைகின்றனர். அப்போதுதான் அந்த மந்திரவாதிகள் ரெண்டு பேருமே டுபாக்கூர் என்பது தெரியவருகிறது.
மாயாவின் அப்பா செய்யாத அந்த வேலையை யார் செய்தார்கள் என்று அனைவருமே குழம்பி நிற்கும்போதுதான் அந்த விபரீதம் புரிகிறது. விஜி என்ன செய்தான் ? யார் அந்தப் பேய் ? மாயா தப்பித்தாளா ? என்பது மிச்சக்கதை.
இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் விஜியாக வரும் சந்தானம் இப்படத்தைத் தயாரித்து நடித்திருக்கிறார். சந்தானம் என்றாலே நக்கலுக்கும் , நையாண்டிக்கும், கவுண்டர்களுக்கும் பஞ்சமே இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் ஏனோ சந்தானத்தை ஹீரோவாகப் பார்க்க முடியவில்லை.
பிற ஹீரோக்களிடம் அடிவாங்கிக் கொண்டே காமெடி செய்த காமெடி நடிகர்களை ஹீரோவாகப் பார்க்க நம் தமிழ் ரசிகர்கள் இன்னும் எத்தனை காலம் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. தியேட்டரில் மொட்டை ராஜேந்திரனுக்குக் கிடைக்கும் அப்ளாஸ் சந்தானத்துக்குக் கிடைக்கவில்லை.
புருவத்தைச் சுருக்கிக் கொண்டே படம் முழுவதும் வரும் சந்தானம் கொஞ்சம் நடிப்பு கற்றுக் கொள்ளவேண்டியது அவசியம். கைகால்களை அசைக்கும் மேனரிசங்கள் சலிப்பைத் தருகிறது. டயலாக் டெலிவரி நன்றாய் இருந்தாலும் ரொம்ப நேரம் ஒரே மாதிரியான உச்சரிப்புகளைக் கேட்கிறோமோ என்றே தோன்றுகிறது.
படத்தின் ஒன்லைன் நன்றாக இருந்தும் கூட காட்சியமைப்புகள் சரியில்லாத காரணத்தால் படம் தொங்கிக் கொண்டு நிற்கிறது. இவ்வளவு நல்ல கதையை வைத்துக் கொண்டு சரியாக டெவலப் செய்யாததால் ரசிக்க முடியவில்லை. படத்தின் முதல் பாதி முழுவதும் காதுசவ்வு கிழியும் அளவிற்கு ஒரே சத்தம். பேய்ப்படம்தான் அதற்காக கேமரா திரும்பும் போதெல்லாம் டமார் என்று சத்தம் கொடுப்பது பழைய டெம்ப்ளேட்.
பேய்ப்படங்கள் எல்லாமே உலக அளவில் ஒரு பழைய பங்களாவுக்குள்ளோ, பாழடைந்த வீட்டுக்குள்ளோ மட்டுமே சுற்றுவது ஒரு ஆகப்பெரிய சோகம். அதில் இந்தப்படமும் தப்பவில்லை. காமெடிக்காகவே எடுக்கப்பட்டதுதான் என்றாலும் சில காட்சிகள் துருத்திக் கொண்டு நிற்கிறது. கடைசி ஒருமணி நேரம் அந்த பங்களா காட்சியில் சிரிப்பு நூறு சதவீதம் உத்திரவாதம்.
மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல சிறப்பு. பேயிடம் அடிவாங்கிக் கொண்டே கதறுவது செம்ம காமெடி. விஜய் டீவி ராமருக்கு மொத்தம் நாலே டயலாக்குகள். ஏன் அவரை டம்மியாக்கி விட்டார்கள் என்று தெரியவில்லை. திரைக்கதையில் ராமரை மட்டும் சரியாகப் பயன்படுத்தியிருந்தார்கள் என்றால் படம் வேறு திசையில் பயணித்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது.
பாடல்களும், சண்டைக்காட்சிகளும் படத்துக்கு மிகப்பெரிய தொய்வு. லைட்டிங்கும், விஷுவல் எஃபெக்ட் வேலைகளும் அருமை. இசை பெரிய அளவில் சோபிக்கவில்லை.
படம் முழுக்க சந்தானம் மட்டுமே பேசிக்கொண்டே இருப்பதால் மற்ற நடிகர்களுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை. இடையில் ஊர்வசி கொஞ்சம் நடித்திருக்கிறார். படத்தின் ஆதாரப்புள்ளியே மாயா கதாத்திரத்தில் வரும் ஸ்ரித்தா சிவதாஸ்தான். அவருக்கான காட்சிகள் மிகவும் குறைவாக இருக்கிறது.
மாயாவின் அப்பாவாக வரும் நடிகர் செம்ம தேர்வு. அவரது உருவ அமைப்பில் பயங்காட்டுவதும், சிரிப்பு காட்டுவதும் மனிதருக்கு எளிதாக வந்திருக்கிறது.
வசனங்கள் சில இடங்களில் ‘ஏ’ ரகம். நல்ல கதை, ஜாலியான படம்தான் என்றாலும் கூட வழக்கமான டெம்ளேட் டைப் பேய்ப்படங்களை எத்தனை தடவைதான் பார்ப்பது?
தில்லுக்கு துட்டு ! துட்டுக்கு வேட்டு !
0 Comments