ஆதிக்க நாடுகளின் மூன்றாம் தர நாடுகள் மீதான பார்வை எப்போதும் எகத்தாளமாகவே இருப்பதை எல்லாரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். முதல் உலகப் போராகட்டும், இரண்டாம் உலகப் போராக இருக்கட்டும், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, குவைத், ஈரான், ஈராக், சிரியா, ஏமன், ஆப்காநிஸ்தான், இலங்கை மற்றும் பாகிஸ்தானாக இருக்கட்டும். இவை எல்லாமே தங்களை விடவும் எளிமையானவர்கள் மீது தங்களின் வலிமையைத் திணிப்பதையே இந்த வரலாறு கண்டிருக்கிறது.
சிங்கப்பூரின் துறைமுகத்தில் நிற்கும் எந்த நாட்டுக் கப்பலாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு சொட்டு கழிவு நீரையோ, கழிவு எண்ணையையோ கடலில் கொட்டிவிட்டால் அவ்வளவுதான். கப்பலின் பாதி விலையை அபராதமாகக் கட்டாமல் கப்பல் துறைமுகத்தை விட்டு அகலாது.
கேலன் கணக்கில் கழிவு எண்ணையை ஏதோ ஒரு நாட்டுக் கப்பலில் வங்காளவிரிகுடாவில் கொட்டிவிட்டு சப்தமே இல்லாமல் சென்று விட்டு, எண்ணைக் கப்பல் விபத்துக்குள்ளாகி கழிவு எண்ணை கடலில் சிந்திவிட்டதாக இந்திய அரசாங்கம் பாடிய ராகத்தை உலகம் மறக்காது. அதிலும் அந்த எண்ணையைக் கக்கூஸ் வாளியில் அள்ளியதுதான் இந்தியத் தொழில் நுட்பத்தின் உச்சம் என்று சொல்லலாம்.
இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகி மீது வெட்கமே இல்லாமல் அணுகுண்டுகளை வீசி லட்சக் கணக்கானோரைக் கொன்ற அமெரிக்காவின் கையாலாகாத்தனம் அனைவரும் அறிந்ததே. போர் நின்றபிற்பாடு ஜெர்மனி தங்கள் கைவசம் இருந்த அணுகுண்டுகளைச் செயலிழக்கச் செய்ய போலியான ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்கிறது. அந்த போலி நிறுவனமோ அணுகுண்டுகளை அப்படியே கொண்டுவந்து கேட்பார் கேள்வியற்ற வங்காள விரிகுடா கடலில் கொட்டி விட்டு தாங்கள் அவைகளைச் செயலிழக்கச் செய்து விட்டதாகக் கமுக்கமாக இருந்து விடுகிறது.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அணுகுண்டுகள் கடலில் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதுதான் பதைபதைக்கும் உண்மை. ஒரு குண்டு ஹிரோஷிமாவிலும், ஒரு குண்டு நாகசாகியிலும் வீசப்பட்டது. இந்த இரண்டு குண்டுகளாலும் ஜப்பான் இழந்தவை நமக்குத் தெரியும். அதன் கதிர்வீச்சுகளை இன்னமும் ஜப்பானியர்கள் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
புயல், கடல் சீற்றம், அலைகளின் சுழற்சி மாறுபாடுகளின் நிமித்தம் கடலில் மூழ்கிக் கிடக்கும் அணுகுண்டுகள் அவ்வப்போது வந்து கரைகளில் கிடப்பது நமக்கு வெறும் செய்தியாகக் கடந்து போவது வாடிக்கை. அதன் நிமித்தம் நகரவிருக்கும் ஆபத்தான எதிர்காலம் குறித்த அச்சம் நம் யாருக்கும் தெரியாது. ரஷ்யாவில் காலாவதியான இரண்டு அணு உலைகளைக் கொண்டு வந்து அணு சமைக்கிற இந்திய ‘மா’க்களுக்கு அணு உலைகள், கதிர்வீச்சு மற்றும் அதன் அபாயங்கள் எப்படிப் புரியும்?
படத்தின் துவக்கத்தில் ஒரு அணுகுண்டு காயலான் கடையில் வெட்டப்படும் போது வெடிக்கிறது. அடுத்த காட்சியில் ஜப்பானில் அணுகுண்டு வெடிப்பு மற்றும் அந்த அணுகுண்டுகள் செயலிழக்க வைக்கப் போடப்படும் ஒப்பந்தம் குறித்த காட்சிகள் ஆவணப் படம் போல பின்னணியில் ஓட தலைப்பு போடுகிறார்கள்.
மகாபலிபுரம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பெண்ணும், அவளது குழந்தையும் ஒரு பொருள் கடற்கரையில் கிடப்பதைக் கண்டு, அதுவொரு அணுகுண்டு என்பதைப் புரிந்து கொண்டு போலீசுக்குத் தகவல் தெரிவிக்கிறாள். போலீஸ் அதை மீட்டு காவல் நிலையத்தில் வெளியில் வைக்கிறார்கள். லோக்கல் திருடன் ஒருவன் அதைப் பித்தளை என்று நினைத்துத் தூக்கிக் கொண்டு போய் ஒரு ஆக்கர் வியாபாரியிடம் எடைக்கு விற்கிறான். அந்த குண்டை ஒரு லாரியில் ஏற்றி காயலான் கடைக்குப் பயணிக்கிறது அந்த லாரி. மறுநாள் காலையில் குண்டு களவு போனதையறிந்த காவல்துறை அதைத் தேடுகிறது.
போலீசோடு கூட்டணி வைத்துக் கொண்டு சமூகவிரோதக் கும்பல் ஒன்று குண்டைத் தேடுகிறது. அந்த குண்டைக் காப்பாற்றி பத்திரப் படுத்தி அதை அழிக்க மாணவர்கள் கொஞ்சம் பேர் அந்த குண்டைத் தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த குண்டு ஒரு லாரியில் ஏற்றப்பட்டு உருக்கு ஆலையை நோக்கிப் பயணிக்கிறது. அந்த ஆலையில் உள்ளவர்கள் அது ஒரு அணுகுண்டு என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல லாரியின் டிரைவரும், கிளீனரும் பதைபதைப்போடு திரும்ப எடுத்து வருகிறார்கள். அந்த அணுகுண்டு யார் கையில் கிடைத்தது என்பது கிளைமாக்ஸ்.
ஒரு அணுகுண்டை முக்கியக் கதாபாத்திரமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பதைபதைக்க வைக்கக் கூடிய திரைக்கதையில் மெல்லிய நகைச்சுவையும், அழகான காதலும் நம்மை கடத்திக் கொண்டு போகிறது. இயக்குனர் அதியன் ஆதிரைக்கு இது முதல் படமாம், நம்ப முடியவில்லை... வாழ்த்துக்கள் சகோதரனே !
ஒரு காயலான் கடையில் வேலை செய்யும் மனிதர்கள், அவர்களின் வாழ்வியல், காதல் மற்றும் அறம், அவர்கள் பேசும் எளிய அரசியல், அவர்களுக்குள்ளே நிகழும் வேறுபாடுகள், பொறாமைகள் என்று கதைக்களமே அட்டகாசம். காட்சிகளும் சின்னசின்ன நுணுக்கங்களையும் நுட்பமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பு என்பதால் கனமான கதையாகத்தானிருக்கும் என்று ஆணித்தரமாக நம்பி விடலாம். அது உண்மையாகவும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. வாழ்த்துக்கள் தோழர் ரஞ்சித்.
கதாநாயகன் ஒரு லாரி டிரைவர். அவனது காதலி ஒரு டீச்சர் என்பதால் இவர்கள் இணைவதில் சாதியச் சிக்கல் என்பதைத் தாண்டி பொருளாதார மற்றும் கல்வியின் மீதான பாகுபாடே முன்னால் நிற்கிறது. அவர்களது காதலின் துவக்கம் காட்டப் பட்டிருக்கவில்லை. ஆனால் காதல் காட்சிகள் அழகு.
லாரி டிரைவர் செல்வம் கேரக்டரில் தினேஷ் மிரட்டல் நடிப்பு. வர்க்க பாகுபாட்டின் ஆதிக்கத்தையும், அதை எதிர்க்கத் திராணியாற்ற தனது இயலாமையையும், ஒருபக்கம் காதலியையும், இன்னொரு பக்கம் உலகையே அச்சுறுத்திய அணுகுண்டோடும் பயணிப்பது என்ற அல்ட்ரா கேரக்டர். தனது கிளீனர் ‘பஞ்சர்’ என்னும் மனிதன் செத்துப் போனான் என்று நினைத்து கதறி அழும் இடத்தில் மனதில் நிற்கிறார். முதலாளியிடம் குடித்துவிட்டு சண்டைக்கு நிற்கும் போது காதலியின் போன் வரவே அவளிடம் பேசுவது என்று தூள் கிளப்புகிறார்.
கயல் ஆனந்தி நிறைவான நடிப்பு. பரியேறும் பெருமாள் படத்தின் கதாபாத்திர சாயலில் இன்னுமொரு கதாபாத்திரம். ஆனால் அந்தப் படத்தை நியாபகப் படுத்தாத கதாபாத்திரம். காதலனிடம் காட்டும் அன்பு, வீட்டிலுள்ளவர்களிடம் காட்டும் தீர்க்கம் என நிறைய காட்சிகளைச் சொல்லலாம்.
படத்தின் இன்னொரு ஹீரோ என்று முனீஸ் காந்தைச் சொல்லலாம். அணுகுண்டின் ஒருமுனை தினேஷின் தோளில் இருக்கிறது என்றால் இன்னொருமுனை முனீஸ்காந்தின் தோள்களில் இருக்கிறது. படம் முழுக்க கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார். அணுகுண்டு என்று தெரியாமல் அதிலுள்ள பித்தளையை எடுக்க வெல்டிங் வைத்து வெட்ட நினைப்பது, அதைத் தோளில் சுமந்து கொண்டு திரிவது, அணுகுண்டு என்று தெரிந்தபின் அலறுவது என மனிதர் சிதறுகிறார்.
இசையும் ஒளிப்பதிவும் அட்டகாசம், பேக்ரவுண்டில் இருந்து ஃபோகஸ் அணுகுண்டுக்கு வரும்போது அல்ட்ரா வைட் ஆகட்டும், சூம் அவுட் ஆகட்டும் மிரட்டல் கோணங்களும், மிரள வைக்கும் இசையுமாக பிரிக்க முடியாத காம்போவில் அமைந்திருக்கிறது.
எல்லா நடிகர்களும் அளவாகச் செய்திருக்கிறார்கள். ஜான் விஜய் தன்னுடைய வழக்கமான மேனரிசத்தைக் கொஞ்சம் ஆல்ட்டர் செய்தால் நன்றாக இருக்கும். போர் வேண்டாம் ! அன்பு மட்டுமே உலகுக்குத் தேவை என்பதை வேறொரு கோணத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் அந்தக் கருத்தரங்கில் வைத்து அந்த ஜப்பானியப் பெரியவர் தன்னுடைய மக்கள் குறித்துச் சொல்லும்போது வரும் அந்த கிராஃபிக்ஸ் கண்டெண்டில் கண்ணீரை வரவழைத்து விட்டிருக்கிறார்கள். இம்மாதிரியான படங்களால் ஒரு தேசமோ அல்லது தனிமனிதனோ வன்முறையைக் கைவிடுவானெனில் இம்மாதியான திரைபடங்கள் ஆயிரமாயிரம் எடுக்கலாம்.
குண்டு – சத்தமின்றி வெடித்திருக்கிறது.
0 Comments