Tamil Sanjikai

எழில் ஒரு இளம்கட்டுமானப் பொறியாளர், சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தீபிகா மீது காதல் கொள்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில் ஒருநாள் தீபிகா டெல்லி செல்கிறார்.

கவின் ஒரு திருட்டு வேலைகள் செய்து வருபவன். மிகவும் அறிவாளி. தன நண்பன் சுருளியோடு சேர்ந்து கொண்டு போலி ஏ.டி .எம் மிஷின்கள் தயாரித்து அதை கபட வேலைகள் செய்து வரும் ஆட்களிடம் கொடுத்து ஏமாற்றி பணம் வாங்குவதுதான் அவர்களின் வேலை.

இந்நிலையில் கவினோடு சேர்ந்து கொண்டு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு கேரளப் பெண்மணி, ஷேர் ஆட்டோவில் தன்னோடு பயணிக்கும் ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவரிடம் தன்னுடைய மகன் ஒரு பைலட் என்று கவினின் புகைப்படத்தைக் காட்டி, அவனை நீ கல்யாணம் செய்து கொள்கிறாயா என்றும் சொல்லி ஆசை வார்த்தை பேசி, தனது சிகிச்சைக்குப் பணம் தேவை என்று சொல்லி அவளிடம் இருந்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறாள். அந்த இளம்பெண்ணும் அதை நம்பி ஒரு லட்சம் ரூபாயோடு வருகிறாள். அந்தத் திட்டத்தை கவின் முறியடிக்கிறான். பணம் காப்பாற்றப் படுகிறது. ஒருகட்டத்தில் அந்த இளம்பெண்ணுக்கு அந்த கேரளா பெண்மணி ஒரு ஃபிராடு என்று தெரிகிறது. ஆனாலும் தன்னுடைய பணத்தை பறித்துக் கொள்ளாத கவின் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது.

இந்த நிலையில் சுருளி தான் கடன் வாங்கிய கந்து வட்டிக் காரனுக்கு தருவதற்காக ஆறு லட்சம் ரூபாயை கவினுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறார். அதை சுருளிக்குத் தெரியாமல் கவின் எடுத்துக் கொண்டு போய் சீட்டாடித் தோற்று விடுகிறான். அந்த கந்து வட்டிக்கும்பல் சுருளியை பிடித்து வைத்துக் கொண்டு பணம் கேட்கிறது. ஒருசில நாட்களில் பணத்தைத் திருப்பித் தருவதாக கவினும், சுருளியும் கவினும் உறுதியளிக்கிறார்கள். ஆனால் சொன்னது போல் பணத்தை புரட்ட முடியாமல் போகிறது. அந்த கந்து வட்டிக் கும்பல் மீண்டும் சுருளியைக் கொண்டு போய் உதைக்கிறது.

வேறு வழியே இல்லாமல் அந்த இளம்பெண்ணிடம் போய் நிற்கும் கவின் தன்னுடைய தாயின் சிகிச்சைக்கென்று சொல்லி பணம் கேட்கிறான். ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் கவின் மீதுள்ள காதலால் அந்தப் அப்பணத்தை எடுத்து கவினிடம் தருகிறாள். அதை எடுத்துக் கொண்டு வரும் கவின் ஒரு வீட்டினுள் புகுந்து ஆகாஷ் என்னும் இளைஞனைக் குத்திக் கொலை செய்து விட்டு தடயங்களை ஒன்று விடாமல் அழித்து விட்டுத் தப்பிக்கிறான்.

போலீஸ் விசாரணை செய்யமுடியாமல் திணறுகிறது. அப்போது அந்த கொலை செய்யப்பட்ட வீட்டின் எதிர்வீட்டில் கொலை நடந்த இரவன்று ஒரு பார்ட்டி நடக்கிறது. அந்த விஷயம் போலீசுக்குத் தெரிந்து அந்த எதிர்வீட்டுக் காரரிடம் விசாரிக்கிறது. அவரது போனில் கொலை நடந்த அன்று இரவு எடுக்கப் பட்ட செல்ஃபியின் பேக்ரவுண்டில் கவின் நிற்பது பதிவாகியிருக்கிறது. இதைப் பார்க்கும் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மகிழ்ச்சியடைந்து , அந்தப் புகைப்படத்தில் இருப்பவனது பெயர் எழில் என்றும் அவன் என்று என் கையில் சிக்குவான்? என்ற வெகுநாட்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக , தங்களுக்கிடையிலான தனிப்பட்ட பகைக்கு வஞ்சம் தீர்க்க எழிலைக் கைது செய்து கொடூரமாக விசாரணை செய்கிறார்.

போலீஸ் அந்த செல்பியை ஆதாரமாகக் கொண்டு எழிலை தண்டித்து விடலாம் என்று எண்ணும் நிலையில், குடிபோதையில் ஒருவன் போலீஸ் வண்டி மீது மோதியதாகச் சொல்லி கவினைக் கைது செய்து கொண்டு வருகிறார்கள். அந்த நபரைப் பார்த்து விசாரணைக்குழு அதிர்ச்சியடைகிறது. ஏனென்றால் எழிலும், கவினும் உருவத்தில் அச்சு அசலாய் ஒன்று போல இருக்கிறார்கள். இப்போது அந்த புகைப்பட ஆதாரம் எடுபடாமல் போகிறது.

கவின் உள்ளே இருப்பது எழிலுக்குத் தெரியாமல் விசாரணை நடக்கிறது. மலர்விழி என்னும் சப் – இன்ஸ்பெக்டர் துப்புத் துலக்குகிறார். அப்போது கொலை செய்யப் பட்ட ஆகாஷுக்கும், கவின் மற்றும் எழிலுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று தெரிய வருகிறது.

கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைக்கும் தலைமுடிகள் ஃபாரன்சிக் துறையில் ஆய்வு செய்யப்பட்டு அதனோடு கவினின் தலைமுடியும், எழிலின் தலைமுடியும் பரிசோதிக்கப் படும்போது அந்த ரெண்டுபேரின் ஆய்வு முடிவும் ஒரே மரபணுவைச் சேர்ந்ததாக இருப்பதைக் கண்டு காவல்துறை மிரண்டு போகிறது.

இடைவேளை ! கவினா ? எழிலா ? யார் கொலையாளி என்பதை காவல்துறை கண்டுபிடித்ததா ? சுருளி கந்துவட்டிக் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டானா ? ஆகாஷ் யாரால் எதற்காகக் கொலை செய்யப்பட்டான் ? என்பதுதான் படபடக்கும் மிச்சக் கதை !

இயக்குனர். மகிழ்திருமேனியின் இயக்கத்தில் நடிகர்.அருண்விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க வெளிவந்திருக்கும் இன்வெஸ்டிகேடிவ் கிரைம் திரில்லர் படம்தான் தடம். இந்திய நாட்டின் சட்டங்களில் சில ஓட்டைகள் இருப்பது ஒரு நிரபராதி தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்று டைட்டில் கார்டோடு துவங்குகிறது படம்.

இந்த ஆண்டில் வெளிவந்திருக்கும் சிறந்த படங்களில் ஒன்றாக தடத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். படத்தின் இறுதிக்காட்சி வரைக்கும் ஒரு பார்வையாளன் எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். சிறந்த பேப்பர் ஒர்க்கும், கள ஆய்வுகளும் சேகரிக்கப்பட்டு தடதடக்கும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

மென்பொறியாளர் வேடத்திலும், தகிடுதத்தம் செய்யும் ஆசாமி வேடத்திலும் தனது பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் அருண் விஜய். படத்தின் ஆரம்பத்தில் காதல் காட்சிகள் போரடிக்காமல் அதும் கூட ஒரு காம்போநேண்ட்தான் என்று ஒட்டிக் கொள்வதில் படத்தின் ஜீவன் காப்பாற்றப் பட்டிருக்கிறது. அருண்விஜய் தான் நடிக்கும் படங்களை தனக்கு ஏற்றவாறு ஏற்று கவனமாக நடித்து வருவதில் அவரது வெற்றி உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அற்புதமான நடிகர் என்பதை வருங்கால இயக்குனர்கள் கவனத்தில் கொள்தல் அவசியம். சீயான் விக்ரம் மாதிரி ஜெயிப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இந்தத் திரைக்கதைகென தன்னை பொருத்திக் கொள்ள மிகப்பெரிய பிம்பமான நட்சத்திர அந்தஸ்துள்ள அதேநேரம் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகரால் மட்டுமே சாத்தியம். அதை அசாத்தியமாக சாதித்திருக்கிறார் அருண்விஜய். வாழ்த்துக்கள் அருண்விஜய் !

நடிகைகள் தேர்வு என்பது ஒரு முக்கியமான வேலை. அதைத் திறம்பட செய்திருக்கிறார் இயக்குனர். அழகான கண்களோடும், மென்புன்னகையோடும் தீபிகாவாக வலம்வரும் தன்யா ஹோப் தன்னுடைய பெயரைப்போலவே நம்பிக்கை ( Hope ) தரும் நடிகையாக மிளிர்கிறார்.

ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் , யாரப்பா அது ஆனந்தி ? என்று கேட்குமளவுக்கு சிறப்பான நடிப்பில் அருமையான சிரிப்பிலும், அளவான நடிப்பிலும் நம் மனங்களைக் கொள்ளையடிக்கும் ஸ்மிருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கவினிடம் அறிமுகமாகும் காட்சி, தன்னை கவினின் அம்மாவாக நடித்து அந்த கேரளப்பெண் ஏமாற்றியது தெரிந்து கலங்குவது, தன் அக்காவிடம் தான் ஏமாற்றப் பட்டது குறித்துச் சொல்லி கலங்கி, ஆனால் கவின் தன்னை ஏமாற்றவில்லையே என்று ஆறுதல் பட்டுக்கொண்ட அடுத்த நிமிடம் கவின் தன்னிடம் ஏமாற்றி பணம் வாங்க வந்திருக்கும்போது , கவினின் கண்களை ஒருவித கலக்கத்தில் பார்த்துக் கொண்டே எந்தத் தயக்கமுமின்றி ஒருலட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கவினிடம் கொடுத்து விட்டு , அதை வாங்கிக் கொண்டு நடக்கும் கவினிடம், உங்களுக்கு என்னுடைய பெயர் தெரியுமா என்று கேட்குமிடங்கள் எல்லாம் சான்சே இல்லை... ஒருநூறு படங்களில் நடித்த அனுபவம் போல இருக்கிறது. வாழ்த்துகள் ஸ்மிருதி !

சோனியா அகர்வால் நல்ல நடிப்பு.

போலீஸ் எஸ்.ஐ . மலர்விழி கேரக்டரில் வரும் வித்யா பிரதீப் சிறப்பான நடிப்பு. ஒருசில கோணங்களில் நயன்தாராவை நினைவு கூறும் முகச் சாயல். ஒரு துப்பும் கிடைக்காமல் சக ஆண் காவலர்களின் மத்தியில் அல்லல் படும் போது ஒருவித பரிதாபம் மேலோங்கி நிற்கிறது. உண்மையில் பெண்காவலர்களின் நிலையும் அதுதானே என்பது போல காட்சியமைத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் ஒரு ஆண்காவலர், சக காவலரிடம்’ அந்த பஜாரி வந்தா திட்டும் ‘ என சொல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆண்வர்க்கம் தேவையேயின்றி பெண்களின் மீது கையாளும் வன்சொற்கள் மிகவும் கொடுமையானது என்று எண்ணத் தோன்றுகிறது.

கொஞ்சம் பிசகினாலும் கதையின் நகர்வு தவறி விடும் என்பதால் யோகி பாபுவுக்கென தனியாக காமெடி டிராக் எழுதாமல் விட்டிருக்கிறார்கள். கொஞ்சம் காட்சிகளில் வந்து போகிறார். கதையின் போக்கிலேயே ஒருவிதமான நகைச்சுவைத்தன்மை இருப்பது போல காட்சியமைப்புகள் இருக்கின்றன. உதாரணமாக ஃபாரன்சிக் ஆஃபீசர் மலருக்கு ஃ போன் செய்து, அந்த இக்கட்டான சூழலில்கூட நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை எனக் கேட்பது, அதே நபரின் பெயரை மலர்விழி தன்னுடைய மொபைலில் பாக்யா இடியட் என்று பதிந்து வைத்திருப்பது, பால்கனியில் நின்று கொண்டு கீழே துணி காயப்போடும் பெண்ணை ரசித்துக் கொண்டே சுவரில் இருக்கும் கைரேகையை காவலர் ஜார்ஜ் மரியான் தன்னுடைய பின்புறத்தை வைத்து தேய்த்து அழித்து விட்டு, தன்னைத் திட்டிய மலர்விழி போனபின்பு , கைரேகை என்ன என்னோட டிக்கிலயா இருக்கு என்று சொல்வார். அப்போது அவரது பிட்டத்தில் அந்த ரத்தக் கைரேகை தோய்ந்திருப்பதை கட்டியிருப்பார்கள். இப்படி படத்தின் போக்கிலேயே நகைச் சுவை இருக்கும். ஆனாலும் ரத்தக் கறைகள் இப்படி குங்குமம் போல துணிகளில் ஒட்டுவதில்லை ஆனதால் அந்த காட்சி திணிக்கப் பட்டதாகவே தோன்றுகிறது. பணம் கிடைக்காத விரக்தியில் பக்கத்தில் இருக்கும் பொருளை கவின் எட்டி உதைப்பது ஏற்று கொள்ளத் தக்கதாக இருந்தாலும், அதே சமயம் பார்ட்டியில் இருந்து பாதியில் வீடுதிரும்பும் எழில் கோபத்தில் தன்னுடைய காருடைய ஸ்டியரிங்கை ஏன் அடிப்பார் என்று தெளிவு படுத்தாமல் விட்டிருகிறார்கள்.

அருண்ராஜின் இசை பிரமாதம். பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், சஸ்பென்ஸ் காட்சிகள், சோகக் காட்சிகள், திரில்லிங் காட்சிகள், செண்டி மென்ட் என்று ஸ்கோர் செய்வதற்கான எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. விதி நதியே மற்றும் இணையே என்று இரண்டு பாடல்கள் அற்புதம்.

ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. படம் முக்கால்வாசி இருட்டிலேயே நகரும் என்பதால் லைட்டிங் அடக்கி வாசித்திருக்கிறார்கள். ஆக்ஷன் பிளாக்குகள் பிரமாதம். அந்த போலீஸ் நிலைய சண்டைக்காட்சி மிரட்டல். டபுள் ஆக்டிங் அருண்விஜய் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சியை அருமையாக மேட்ச் பண்ணியிருக்கிறார்கள் எடிட்டரும், சி.ஜி குழுவினரும்... வாழ்த்துக்கள் !

எடிட்டரின் பனி சிறப்பு. தேவையில்லாத காட்சிகள் என்று சொல்லும்படியான எந்த காட்சிகளும் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். படத்தின் போக்கு விறுவிறுப்பாக இருப்பதால் லாஜிக் மிஸ்ஸிங் எதுவுமே தெரியாது என்பதுதான் படத்தின் வெற்றி.

படத்தில் வரும் அத்தனை பெரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு கொலையை செய்துவிட்டு பத்து லட்சம் ரூபாய் கொடுத்து அதை மறைத்து விட்டு வந்த ஆகாஷை யார் கொலை செய்தார்கள் என்பதை தத்ரூபமாக கொண்டு போய் இறுதியில் ஒரு சின்ன விஷயத்தை நாம் தவறவிட்டோமே என்று காவல்துறையையும், ஆடியன்ஸையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. அதிலும் கடைசியில் ஒவ்வொன்றாய் அவிழும் முடிச்சுகள் அற்புதம். கிளைமாக்ஸ் பிரமாதம். படத்தைத் திரையில் போய்ப்பாருங்கள் !

தடம் திரைப்படம் ! தடதடக்கும் திரைப்படம் !

0 Comments

Write A Comment