Tamil Sanjikai

தான் காதலித்த தன்னுடைய கல்லூரி காலத்துக் காதலன் மனமுடைந்து இருக்கும் நிலையில் இருப்பது கண்டு மனமுடைந்து அவனை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து அவனோடு சல்லாபிக்கிறாள் வேம்பு என்னும் இளம்பெண். கலவியின் முடிவில் படுக்கையிலேயே அவன் இறந்து கிடப்பது கண்டு பதைபதைக்கிறாள். அப்போது அவளது கணவன் முகில் வருகிறான். டெட்பாடியை எடுத்து ஃப்ரிஜ்ஜினுள் ஒளித்து வைக்கிறாள் வேம்பு. தன்னுடைய கணவனிடம் நடந்த சம்பவத்தைச் சொல்ல அவனும் ஒருவழியாகச் சம்மதித்து அந்த பிணத்தை ஒழிக்க ஏற்பாடு செய்து புறப்படுகிறார்கள். இதை மோப்பம் பிடித்து விட்ட எஸ்.ஐ. பெர்லின் இவர்களைத் துரத்துகிறான்.

ஐந்து பள்ளி நண்பர்கள் சேர்ந்து ஒருவனது வீட்டிலுள்ள ஆட்கள் அனைவரும் வெளியே போன ஒரு தருணத்தில் அவனது வீட்டில் வைத்து பலான படம் பார்க்க பிளான் செய்கிறார்கள். படம் துவங்கும் முதல் காட்சியில் ஒரு பெண் தோன்றுகிறாள். அந்தப்பெண் அந்த ஐந்து மாணவர்களில் ஒருவனது தாய் லீலா. தன்னுடைய தாயை இம்மாதிரியான ஒரு சூழலில் காணும் அவன் கொலைவெறியில் கத்திக் கொண்டே டிவியை உடைத்து விட்டு தன் தாயைக் கொல்ல வீட்டிற்கு ஓடுகிறான். அவனைத் துரத்தியபடியே சக நண்பன் ஒருவன் ஓடுகிறான்.

டிவி உடைந்த சோகத்தில் மீதம் மூன்று பேர் அமர்ந்திருக்கிறார்கள். அன்று மாலைக்குள் வேறு டீ.வி வாங்கி வைக்காவிட்டால் தன்னுடைய அப்பா தன்னைத் தொலைத்து விடுவார் என்று சொல்கிறான் அந்த வீட்டிலுள்ள பையன். டீ.வியை வாங்க காசு வேண்டும் என்று ரவுடி இடிஅமீன் என்பவனைத் தொடர்பு கொள்கிறார்கள். அவன் இவர்கள் மூவரையும் ஒரு கொலையை செய்ய ஏவுகிறான்.

தன்னுடைய தாயைக் கொலை செய்ய ஸ்க்ரு டிரைவரை எடுத்துக் கொண்டு படியேறி ஓடும் அந்த மாணவன் தடுமாறிக் கீழே விழுந்து தன்னுடைய வயிற்றில் குத்திக் கொள்கிறான். அவனைத் தூக்கிக் கொண்டு நண்பனும் தாய் லீலாவும் ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள். லீலாவின் கணவன் அற்புதம் கடவுளின் பால் ஈர்க்கப்பட்டு ஒரு புதுமாதிரியான சபையை நடத்தி வருகிறான். அவனுக்கும் லீலாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருக்கும் நிலையில் அவன் தன்னுடைய மகனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று அவனைக் காயத்தோடு கடத்திச் செல்கிறான்.

ஒரு நள்ளிரவில் தன் மனைவியையும், மகனையும் தவிக்கவிட்டுவிட்டு ஓடிப்போன மாணிக்கத்தை ஏழரை ஆண்டுகள் கழித்து வரவேற்க அவனுடைய ஒட்டு மொத்தக் குடும்பமும் காத்துக்கிடக்கும் சூழலில் மாணிக்கம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஷில்பா என்னும் பெண்ணாக மாறி காரில் வந்து இறங்குகிறான். அவனைக் கண்டு ஒட்டு மொத்தக் குடும்பமே அதிர்ந்து நிற்கிறது.

மாணிக்கத்தின் மகன் ராசுக்குட்டியை அவனது பள்ளியில் எல்லோரும் டெஸ்ட் டியுப் பேபி என்று அழைப்பதன் நிமித்தம் அவன் தன்னுடைய அப்பாவை எல்லாரது முன்பாகக் கொண்டு நிறுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த சூழலில் அவன் தன அப்பாவைக் கண்டு அதிசயிக்கிறான். ஆனாலும் தன் அப்பா பெண்ணாய் இருந்தால் என்ன ? அது அவரது ஸ்டைல் .... நான் அப்பாவோடுதான் போவேன் என்று உறுதியாக நிற்கிறான். அப்பாவும் , மகனும் இந்த சமூகத்தால் அவமானப் படுத்தப் படுகிறார்கள்.

இந்த அத்தனைக் கதாபாத்திரங்களும், சம்பவங்களுமே ஒரு ஒற்றைப் புள்ளியில் வந்து நிற்கிறார்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல் எல்லா சம்பவங்களும் முற்றுப் பெறுகின்றன. அதுதான் சூப்பர் டீலக்சின் மொத்தக்கதை.

இந்தப்படம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் நூற்று ஐம்பதாவது படம் என்று சொல்லலாம் அல்லது இந்த நூற்றாண்டின் சத்யஜித்ரே எடுத்த இரண்டாவது படம் என்று சொல்லலாம். தன்னுடைய முதல் படமான ஆரண்ய காண்டத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன்பால் ஈர்த்த இயக்குனர் இப்படத்தின்மூலம் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

அருமையான திரைக்கதையும் அதைப் பிறழாமல் படமாக்கிய விதமும் அற்புதம். பாராட்டுக்கள் தியாகராஜன் குமாரராஜா ! எல்லாக் கதாபாத்திரமும் அருமையான படைப்புகள்... ஏதொன்றையும் குறை சொல்ல முடியாது. படத்தில் கதாபாத்திரங்கள் துவங்கி Foley Sound எனப்படும் சுற்றுச் சூழல் ஒலி வரைக்கும் கதை சொல்லுகின்றன. அத்தனை நேர்த்தியான கதை சொல்லல். ப்ராப்பர்ட்டி முதற்கொண்டு கதைநகரும் இடங்கள் அதற்கான லைட்டிங்குகள் என்று ஒரு தனி ஆவர்த்தனம் நிகழ்த்தியிருக்கிறார். Stable Frame களே முன்னிலை வகிக்கின்றன. ஆனாலும் கதை நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

அடுத்த பூங்கொத்து விஜய் சேதுபதிக்குத்தான் கொடுக்க வேண்டும். தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் அவர் இந்தக் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்ததே மிகப்பெரிய ஆச்சர்யம். ஒரு திருநங்கையாக மாறியிருக்கிறார். படத்தில் அவர் வெறும் காட்சிகள் குறைவு என்றாலும் மனதைப்பாதிக்கும் கதாபாத்திரம் அவருடையது. தன்னுடைய செயற்கைமுடியை எடுத்து தன்னை அசிங்கப்படுத்திய எஸ்.ஐ.யை கீழே தள்ளிவிட்டு அவனது தலையில் கைவைத்து சாபம் கொடுத்து விட்டுப் போவதெல்லாம் வேற லெவல். வாழ்த்துக்கள் !

இரண்டாவது ஃபகத் பாசில், மனிதர் படம் முழுக்க பின்னியிருக்கிறார். தங்களுடைய பாத்திரத்தை உள்வாங்கி நடிப்பதில் தென்னிந்தியாவில் மலையாள நடிகர்களுக்கு நிகர் அவர்கள்தான். ஃப்ரிஜ்ஜில் பிணத்தைக் கண்டு அதிர்வது, தன்னுடைய மனைவி சோரம் போனது தெரிந்தும் அவளோடு பயணிப்பது, காரில் உட்கார்ந்து கொண்டு புலம்புவது என்று மனிதர் தலையில் கரகம் எடுத்து ஆடியிருக்கிறார்.

மூன்றாவது சமந்தா, சமந்தா இத்தனை பெரிய நடிப்பாற்றல் மிக்கவரா என்று அதிசயிக்க வைக்கிறார். கிளைமாக்சில் சான்சே இல்லை... வாழ்த்துக்கள் சமந்தா !

நான்காவது விஜய் சேதுபதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் அஸ்வந்த் அசோக் குமார். முதல் காட்சியில் தனது வீட்டுக் கதவு தட்டப்பட்டு , தன்னுடைய அப்பாதான் வந்துவிட்டாரோ என்று ஓடிச்சென்று வாசலில் நிற்கும் பால்காரரைப் பார்த்து கோபத்தில் , ‘அம்மா பாள்’ என்ற வெற்று சலிப்புடன் திரும்பி நடக்கும் காட்சி ஒரு சோறு பதம். ஷூட்டிங் முதல் டப்பிங் வரையில் விளையாடியிருக்கிறான். வாழ்த்துக்கள் குட்டிப்பையா !

ஐந்தாவது ரம்யாகிருஷ்ணன், அற்புதமான பாத்திரம் அவருக்கு... கவர்ச்சி நடிகையாக நடிக்கும் கதாநாயகிகளின் பிள்ளைகளின் தாயைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். தன் கணவனிடம் வாக்குவாதம் செய்வதாகட்டும், தன்னுடைய மகனைக் காப்பாற்ற பரிதவிப்பதிலாகட்டும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஆறாவது மிஸ்கின், மிகையான நடிப்புதான் என்றாலும் படத்தில் அவரது கேரக்டர் அப்படி டிசைன் செய்யப் பட்டிருக்கிறது. நடிகர் மிஸ்கினுக்கு வாழ்த்துகள்.

பள்ளி நண்பர்களாக வரும் ஐந்து நண்பர்களும் அருமையான நடிப்பு. அதிலும் வசந்தாக வரும் குண்டுப்பையன் கவனத்தை ஈர்க்கிறான்.

பக்ஸ் பகவதி பெருமாளுக்கு காமக்கொடூரன் எஸ்.ஐ வேடம்... அத்தனை பொருத்தமாக இல்லையென்றாலும் பரவாயில்லை... நடிப்பில் மெருகேறியிருக்கிறார்.படத்திலுள்ள அத்தனை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அசத்தியிருக்கிறார். படத்தில் பாதி இடங்களில் பின்னணியில் அப்பாவின் பாடல்கள் ஒலிப்பதால் அதுவே பேரின்பமாக இருக்கிறது. படத்தில் பாடல்கள் என்று தனியாக இல்லை. அதனால் சுதந்திரமாக வேலை செய்திருக்கிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு பற்றித் தனியாக சொல்லவேண்டுமா என்ன ? கிடைக்கும் இடங்களில் எல்லாம் கேமரா மொழியில் பேசியிருக்கிறார்.

படத்தில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அரசியல் பேசியிருக்கிறார்கள். சமூகத்தில் உள்ள விசித்திரமான மனிதர்கள் சாமானியர்களோடு இணையும் தருணங்களை எல்லாம் அருமையாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் காட்சியமைப்புகள் ஆரண்ய காண்டம் போலவே இருப்பது ஒருவித உறுத்தல். தங்களின் மூன்றாம் படமும் இவ்வாறே இருக்குமாயின் தாங்கள் ஒரு டெம்ப்ளேட்டில் அமரவைக்கப் படும் அபாயம் இருக்கிறது தியாகராஜன்... படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் திணறல் இருக்கிறது. படம் எப்போது முடியும் ? எப்படி முடியும் என்று ரசிகர்களை ஒருவித நெளிசலில் அமர்த்துவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். எடிட்டருக்குக் கொஞ்சம் வேலை கொடுங்கள்.

இந்த சிறிய குறைகள் மட்டுமே இருந்தாலும், படம் முழுக்க இழையோடும் மெல்லிய நகைச்சுவை உட்கார வைத்திருக்கிறது. கிளைமாக்ஸ் ஆரண்ய காண்டம் அளவிற்கு இல்லையென்றாலும் கூட இது வேற லெவல் படம் என்பது சினிமா மொழி தெரிந்தவர்களுக்குக் கண்கூடாய் விளங்கும். படக்குழுனருக்கு வாழ்த்துகள் !

சூப்பர் டீலக்ஸ் – சூப்பரோ சூப்பர் டீலக்ஸ்

2 Comments

  1. அழகான பகுப்பாய்வு... நான் நினைத்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள்....

Write A Comment