Tamil Sanjikai

திருவும், சூப்பர் எனப்படும் சிறுவனும் தென்காசியில் திருட்டுத் தொழில் செய்து கொண்டு திரிகிறார்கள். மலேசியாவில் ரப்பர் பால் வெட்டும் வேலை பார்க்கும் வெண்பா விடுமுறைக்கு சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறாள்.

திருவுக்கு குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே காதில் விழும் வினோதமான ஒரு பழக்கம். வெண்பாவுக்கோ ‘சத்தம் போடாதே’ என்பதைக் கூட சத்தமாகக் கத்திச் சொல்லும் பழக்கம் இருக்கிறது. வெண்பாவைப் பார்த்த மாத்திரத்தில் திருவுக்குப் பிடித்துப் போகிறது.

தன்னுடைய அக்கா புருஷனான மாமனின் வற்புறுத்தல் தாளாமல் வேண்டா வெறுப்பாக திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். வரும் வரன்கள் அனைவரும் விரட்டப்படுகிறார்கள். திருவின் மாமாவும், சூப்பரும் சென்று வெண்பா வீட்டில் சென்று பெண் கேட்கிறார்கள். அவர்களை வெண்பாவின் மாமன், திருட்டுப் பயலுக்கு பெண் ஒரு கேடா என்று விரட்டுகிறான். தன்னுடைய மாமனை வெறுப்பேற்ற, தான் திருவைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறாள்.

இதையடுத்து திரு வெண்பாவின் பின்னாலேயே சுற்றுகிறான். ஒரு கட்டத்தில் இருவரும் காதலாகி கசிந்துருகுகிறார்கள். ஒருநாள் இருவரும் தனியாக இருக்கும்போது வெண்பாவின் மாமன் வெண்பாவை அடிக்க முயலவே திரு அவனைப் போட்டு பொளக்கிறான்.

வெண்பா மலேசியா திரும்ப வேண்டிய நாளில் ஏர்போர்ட்டில் வைத்து அவளுக்கு திரு தாலி கட்டுகிறான். வேலையை விட்டுவிட்டு ரெண்டு நாளில் திரும்ப வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு விமானம் ஏறுகிறாள் வெண்பா.

வெண்பாவைப் பழிவாங்கும் நோக்கில் அவளது மாமன் வெண்பாவின் ஏஜெண்டிடம் பணம் வாங்கிக் கொண்டு அவளை தாய்லாந்து நாட்டில் விற்றுவிடுகிறான். இதையறிந்த வெண்பா பதறி திருவுக்கு போன் செய்து ஐந்து லட்சம் கொடுத்தால்தான் தான் தப்ப முடியும் என்று சொல்கிறாள். திரு தன்னுடைய வீட்டை விற்று ஐந்து லட்சத்தோடு திருட்டுப் பாஸ்போர்ட் வாங்கி , தன்னோடு சூப்பரையும் அழைத்துக் கொண்டு தாய்லாந்து செல்கிறான். போகும் வழியில் ஒருதிருட்டு வழக்கில் ரெண்டு பேரையும் காவல் துறை கைது செய்கிறது. அதனையடுத்து இருவரும் ஒரு பெரிய இன்டர்நேஷனல் கிரிமினல்களிடம் சிக்கி அந்த கும்பல் கொல்ல அலைகிறது. அங்கே வெண்பாவை வேறுநாட்டுக்கு கடத்த முயல்கிறார்கள்.

வெண்பா என்ன ஆனாள் ? திருவும் , சூப்பரும் தப்பித்தார்களா ? என்பது பரபர விறுவிறு மீதிக் கதை.

பெரும் பணம் படைத்தவர்களின் முகப் பொலிவுக்காக இளம்பெண்களின் தோலை உரித்து, பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அதை ஏற்றுமதி செய்யும் ஸ்கின் டிரேட் கும்பலை மையப்படுத்தி கதையைப் பின்னியிருக்கிறார்கள்.

திருவாக விஜய் சேதுபதியும், சூப்பராக அவரது சொந்த மகன் சூர்யா சேதுபதியும் போடும் ஆட்டம் அபாரம். மாஸ் ஹீரோ எஃபெக்ட். முதல் பாதியில் செம்ம காமெடி ரகளையாக கிச்சுக்கிச்சு மூட்டியபடியே நகரும் கதை இரண்டாம் பாதியில் படபடத்து ஓடுகிறது.

விஜய் சேதுபதிதான் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ரொமான்டிக் லுக் என்று சொல்லி மூஞ்சை ஒரு டைப்பாக வைத்துக் கொண்டு அஞ்சலியிடம் போய் நிற்பதாகட்டும், தன்னுடைய மாமா மதராச பட்டிணம் ஜார்ஜிடம் கதை சொல்வதிலாகட்டும், பேங்க்காரர்களை அலைய வைப்பதிலாகட்டும் செம்ம காமெடி பண்ணுகிறார். டயலாக் டெலிவரி பிரமாதம். சாதாரணமாக புரியாத விஜய் சேதுபதியின் வசனங்கள் சிந்துபாத்தில் சரி செய்யப் பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். டப்பிங்கில் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

வெண்பாவாக அஞ்சலியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார். சத்தம் போட்டு பேசி காமெடி செய்திருக்கிறார். மலேசியாவில் போய் படும் துன்பங்களில் அஞ்சலியிடம் நல்ல நடிப்பு முதிர்ச்சி தெரிகிறது. முத்தக்காட்சிகளில் அழகு.

சேதுபதி படத்தில் காமெடி செய்த லிங்கா சிந்துபாத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார். உடலை அசாத்தியமாக டெவலப் செய்து மிரள வைத்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பின் ஒரு சிறிய தொய்வு ஏற்படுகிறது. ஒரு மொழி தெரியாத நாட்டில் போய் அத்தனை பேரை அடித்துப் போட்டு விட்டு ஓடுவது, அத்தனை பெரிய டானின் வீட்டில் போய் அவரை மின்சார ஷாக் வைத்து சாகடிப்பது, ஒரு நூறு பேருக்கு மேல் துப்பாக்கியோடு துரத்தி , அவர்களை உண்டிவில்லால் சாகடிப்பது என நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் விஜய் சேதுபதியும் அவரது மகனும் படத்தை நின்று வழிநடத்தியிருக்கிறார்கள்.

யுவனின் இசை ஆவரேஜ்தான். ஒளிப்பதிவு நிறைவு, எடிட்டரும் நிறைவாகச் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் அற்புதம். தயாரிப்பாளரைப் பாதுகாத்த வகையில் இயக்குனர் எஸ்.யு .அருண்குமாருக்கு பூங்கொத்துகள் தரலாம். படமும் ஜாலியாக இருப்பதால் இன்னுமொரு முறை பார்க்கலாம்.

எத்தனை பெரிய லாஜீக் மீறல்கள் இருந்தாலும் கூட என்டர்டெயினர் ஜானர் படங்கள் வெற்றி பெற்று விடும். அந்த வகையில் சிந்துபாத் ! ஜிந்தாபாத் !

0 Comments

Write A Comment