சென்னையின் பெரும்புள்ளியான சேனாபதியைக் குண்டு வீசி கொல்ல ரெண்டு பேர் முயற்சிக்கிறார்கள். அதில் சேனாபதியும், அவரது மனைவி லக்ஷ்மியும் காயங்களோடு தப்பிக்கிறார்கள். சேனாபதியின் மகன்கள் வரதன், தியாகு மற்றும் எத்திராஜ் ஆகியோர் தங்கள் பெற்றோரைக் கொல்ல முயற்சித்தது தன் தந்தையின் தொழில் எதிரியான சின்னப்பதாசன்தான் என்று சந்தேகிக்கிறார்கள். அதில் சின்னப்பதாசனின் மருமகன் கொல்லப்படுகிறான். பகை வளர்கிறது. ஒரு கட்டத்தில் சேனாபதியைக் கொல்ல முயன்றது அவரது மகன்களில் ஒருவன்தான் என்று சேனாபதிக்கு தெரிகிறது. அது யார் என்பதை சொல்லாமலேயே அவர் செத்தும் போகிறார்.
துபாயில் பிசினஸ் செய்யும் தியாகுவின் மனைவி ரேணு போதைப் பொருள் வைத்திருந்ததாக சித்தரிக்கப் பட்டு சிறைக்கு செல்கிறாள். செர்பியாவில் ஆயுத வியாபாரம் செய்யும் எத்திராஜின் மனைவி சாயா சுட்டுக் கொல்லப்படுகிறாள். இதன் பின்னணியில் சேனாபதியின் மூத்த மகன் வரதன் இருப்பது தெரிய வருகிறது. சேனாபதியை ஒழித்து, தன் தம்பிகளையும் அழித்துவிட்டால் சேனாபதியின் சாம்ராஜ்யத்தின் ஒரே ராஜா தான்தான் என்ற எண்ணத்தில் வரதன் போடும் கணக்கு என்னவானது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இயக்குனர் மணிரத்னத்தின் காக்டெயில்தான் செக்கச் சிவந்த வானம். ருசியாக இருக்கிறது. முன்னணி கதாநாயகர்கள் படத்தின் மிகப்பெரும் பலம். ஆனாலும் கூட ஒரு மிகப்பெரிய மெகா சீரியலின் இரண்டு எபிசோடுகளைப் பார்த்தது போல இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனம். இரண்டரை மணிநேரம் சீட்டில் உட்கார வைக்கும் அதிரிபுதிரியான திரைக்கதைதான் என்றாலும் இன்னும் டீட்டேயிலாக சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். வழக்கமான மணிரத்னத்தின் கிளாசிக் லுக் போஸ்டரோடு நின்று போய்விட்டது. லைட்டிங்,ஸ்கிரீன் ரிச்னெஸ் என்று பெரிய அளவில் இல்லை என்பது ஏமாற்றமே ! ஆனாலும் படம் போரடிக்கவில்லை. ஏ.ஆர்.ரகுமான் ஏமாற்றி விட்டார்.
பிரகாஷ்ராஜ் சேனாபதி வேடத்தில் மிகவும் நிறைவாய் நடித்திருக்கிறார். பாவம் ! டான் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு துப்பாக்கிகளை அவரது பிள்ளைகள் மற்றும் அடியாட்கள் கையில் கொடுத்திருக்கிறார்கள். அவர் எப்படி ஒரு டான் ஆனார் என்பதை செக்கச் சிவந்த வானம் பாகம் 2 ல் சொல்வார்களோ என்னவோ ? படத்தின் முதல் காட்சியில் தன் திருமண நாளன்று மனைவி ஜெயசுதாவுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு , மனைவியோடு கொஞ்சிக் கொண்டு வரும் வழியில் இரண்டு பேரால் தாக்குதலுக்காளாகி மருத்துவமனையில் படுத்துக் கிடந்து, தங்கள் பிள்ளைகளே தன்னைக் கொல்ல முயற்சித்தது குறித்த வேதனையில் மாரடைப்பு ஏற்பட்டு செத்து போகிறார். அப்புறம் வரும் காட்சிகளில் எல்லாம் , தன் மாமனாரைக் கொலை செய்தார் சேனாபதி, மிகப்பெரிய டான் சேனாபதி, தொழிலதிபர் சேனாபதி... என்றெல்லாம் ஆளாளுக்கு அவரைப் பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். எந்த விவரங்களும் விவரிக்கப் படவில்லை.
விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரில் படம் விரியும் போதும், நான்கு கதாநாயகர்களில் அவரையே கடைசியாக அறிமுகம் செய்யும் போதும் அவர்தான் படத்தின் மெயின் லீட் என்பது தெரிந்து போகிறது. சிக்கலில்லாத வேடம். மீசையை மழித்துக் கொண்டு ஒரு இஸ்லாமிய போலீஸ்காரனாக வருகிறார். வழக்கம் போல அவரது நக்கல் நிறைந்த வசனங்களால் திரையில் நிற்கிறார். நான்கு கதாநாயகர்களில் போர்ஷன் அலாட்மென்ட் கச்சிதம். ரொம்பவுமே பேலன்ஸ் செய்திருக்கிறார்கள். போலீஸ் என்கொயரியில் சக உயர் அதிகாரிகளிடம் கதை சொல்லும் போதும், குடித்துவிட்டு கூதல் செய்வதுமாக விஜய் சேதுபதி ஜாலியாக நடித்திருக்கிறார். தன்னை வழிமறிக்கும் விலைமாதுவிடம் தன் கையில் காசில்லை என்று சொல்லும்போது திரையரங்கம் சிரிப்பால் ததும்புகிறது. கிளைமாக்சில் அதகளம் செய்கிறார்.
அரவிந்த்சாமி வழக்கமான ஸ்கோரிங். படத்தின் பாதியிலேயே அவர்தான் வில்லன் என்று தெரிந்ததும், படம் வழக்கமான கிளைமாக்ஸ் நோக்கி பயணிக்கிறது. மனைவி ஜோதிகா இருக்கும் போது பத்திரிக்கையாளரான அதிதி ராவ் ஹைதாரியோடு சல்லாபித்துக் கொண்டும், சமையல் செய்து கொண்டும் திரியும் ஒரு கேங்க்ஸ்டர் மாதிரியான ஒரு கேரக்டர். மனிதர் உடம்பை ஜம்மென்று வைத்துக் கொண்டு வருகிறார். அவருக்கான ஏரியா படத்தில் ரொம்ப சின்னதுதான். துப்பாக்கியால் டப் டப் பென சுட்டுக் கொண்டே இருக்கிறார். சென்னையில் ஒரு பெரிய டான் டீம் இருப்பது , அதை அவ்வப்போது ஐ.ஜி வந்து ஹஸ்கி வாய்சில் எச்சரிப்பது, எல்லார் கையிலும் துப்பாக்கி இருப்பது என்று படத்தில் ஏகப்பட்ட சின்னப்புள்ளைத் தனங்கள்.
சிம்புவைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இத்தனை ரசிகர்களை வைத்துக் கொண்டு இன்னும் தனக்கென ஒரு இடத்தை தன்னுடைய சேட்டைகளால் தக்க வைத்துக் கொள்ளாமலிருப்பது வேதனையே... அவர் வரும்போதெல்லாம் விசில் பறக்கிறது. உப்பிப் போன உடலைத் தூக்கிக் கொண்டு மூச்சிரைக்க அவர் ஓடும் போது நமக்கு மூச்சு வாங்குகிறது. காதலி சுட்டுக் கொல்லப் படுவதை பார்த்துக் கலங்குமிடத்தில் சிம்பு .... அன்பு .... செர்பியாவில் ஆயூத வியாபாரம் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர் போலீசிடமிருந்து தப்பி வந்து பார்சலைப் பிரிக்கும் போது அதற்குள் ஹெராயின் பொட்டலம் போலத் தெரிகிறது. அவரின் காதலியாக வரும் டயானா எரப்பாவுக்கு ஒரு டவுசர் அணிந்து விட்டிருக்கலாம். காஸ்டியும் டிசைனருக்கு ஏன் இத்தனை கஞ்சத்தனம்?
மன்சூரலிகான் யார் ? அவர் எதற்கு வருகிறார் ? என்று கேள்வி எழுகிறது. தேவையில்லாமல் வந்து குண்டடி பட்டு செத்துப் போகிறார்.
ஜோதிகா அழகு. நல்ல நடிப்பு. தனது கணவன் செத்துப் போய்விடக் கூடாது என்று தவிக்கும் இடங்களில் ஸ்கோரிங் ....தன்னுடைய கணவனின் கள்ளக் காதலியிடம் மணிரத்னம் ஸ்டைலில் பேசுகிறார். ஏங்க மணிரத்னம் சார் ! இளம்பத்திரிகை நிருபரான அதிதி ராவைப் பார்த்து ஜோதிகா, இந்தக் கூத்தாடி டெலிவிஷன்காரியோடு சுத்துறீங்களே? என்று அரவிந்த்சாமியிடம் கேட்கும் காட்சி திருவாளர் எஸ்.வி.சேகரிடம் இருந்து உருவியதுதானே?
அருண் விஜய் அரபிக்காரர்களிடம் பேசிக் கொண்டே இருக்கிறார். பிசினஸ் செய்வதாக எந்த விவரங்களும் சொல்லப் படவில்லை. அவர் அங்கி ரிச்சாக இருப்பதை நம்ப வைக்க யாட்ச் படகு , டாப் ஆங்கிள் ஷாட்கள் , அவரை இன்னொரு யாட்சில் தேடி வரும் மனைவி என்று பணம்தான் வீண். அருண் விஜய்க்கு பாடி பில்டிங் தவிர்த்து சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. மற்ற ஹீரோக்கள் திரையை ஆக்கிரமித்து வைத்திருப்பதால் இவர் பெரிதாக சோபிக்கவில்லை. அவரது மனைவியாக , இலங்கை பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ். இலங்கைத் தமிழ் அழகாக இருக்குமே ? ஏன் இந்தக் கொலைவெறி ?
நியு வேர்ல்டு என்றொரு கொரிய படத்தை லவட்டி வானத்தை சிவக்க வைத்திருக்கிறார்கள். மசாலா காலியாகி விட்டது போல தெரிகிறது. சுட்டதே சுட்டீர்கள் ... கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
செக்கச் சிவந்த வானம்! செத்துப் போன வனம் !
0 Comments