Tamil Sanjikai

செத்தும் கொடுத்தான் சீதக்காதி:

மேடை நாடகங்களையே தன்னுடைய வாழ்க்கையாக எண்ணிய ஆதிமூலம் என்ற ஒரு மனிதன் தன்னுடைய மகள் வயிற்றுப் பிள்ளையான சிறுவன் தருணின் அறுவை சிகிச்சைக்குப் பணமின்றி மனம் உடைந்து போகிறார். அந்த மன உளைச்சலில் நாடக மேடையிலேயே இறந்தும் போகிறார். தன்னுடைய மரணத்திற்குப் பின்னும் தங்கள் நாடகக் குழுவிலுள்ள சக நடிகர்களின் உடலுக்குள் புகுந்து தன்னுடைய நடிப்புத் தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறார். தான் உயிரோடு இருக்கும் போது சினிமாவில் நடிக்காமல் மக்களின் முன்பாகவே நடிக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர் ஆதிமூலம். அவரது மரணத்தின் பிற்பாடு இயக்குனர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க ஆதிமூலத்தின் நண்பர் பரசுராமன் துணையோடு அந்த நாடகக்குழுவின் நடிகர். சரவணனின் உடலின் வந்து நடித்துக் கொடுக்கிறார் ஆதிமூலம். சரவணன் மிகவும் பிரபலமான நடிகராகிறார். ஒருகட்டத்தில் சரவணன் மமதையில் ஆதிமூலத்தின் ஆத்துமாவை நிராகரிக்கிறார். அதன்பின்பு ஆதிமூலத்தின் ஆத்துமா சரவணனுக்கு ஒத்துழைக்க மறுத்து சரவணனின் குட்டு வெளியாகி வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. ஆதிமூலத்தின் ஆத்மா நடிப்பது குறித்து கேள்விப்பட்ட அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதி மூலத்தின் வீட்டில் அணிவகுக்கின்றனர். மோசமான கதைகளை பரசுராமன் நிராகரிக்கிறார். நல்ல கதைகளை ஆதிமூலத்தின் ஆத்துமா நடித்துக் கொடுக்கிறது. வருமானம் வருகிறது. அதன்பின்பு ஏற்படும் குழப்பங்களும், நிகழ்வுகளுமே சீதக்காதி படத்தின் மீதிக்கதை.

இப்படி ஒரு அருமையான கான்செப்டை வைத்துக் கொண்டு பின்னிப் பெடலெடுக்காமல் திரைக்கதையை அம்போவென்று விட்டிருக்கிறார்கள்.

முதல் காட்சியில் 1948 ஆம் ஆண்டு காலகட்டத்தைக் காட்டி மேடை நாடகமான லவகுசாவில் ஆதிமூலம் நடித்துக் கொண்டிருப்பதாக படம் துவங்குகிறது. அதன் பின்பு 1956 ல் கோவலன் கதை மற்றும் 1970 ல் சத்தியவான் சாவித்திரியில் இளைஞனாகவும், 1985 ல் வயது முதிர்ந்த ஒரு புரட்சியாளராகவும், 2013 ல் அவுரங்கசீப் நாடகத்தில் முதிர்ந்த மனிதராகவும் நடித்து வருகிறார். ஏதோ சொல்ல வருகிறார்கள் போல! என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே 2017 ல் ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது மேடையிலேயே செத்துப் போகிறார் விஜய் சேதுபதி. இந்த ஒரு வரிசை (sequence) மட்டுமே சுமார் ஐம்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் கண்ணீரும் கம்பலையுமாக கதை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தியேட்டரில் இருந்து பாதிபேர் வெளியேறி விடுவது படத்தின் வியாபாரத்தைத் தகர்க்கும் என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை என்பதே வியப்பாக இருக்கிறது.

படத்தை நான்காக வரிசைப்படுத்தி விடலாம். மொத்தம் நான்கே sequenceகள். 1.ஆதிமூலத்தின் மேடைநாடகங்கள், 2. படப்பிடிப்பு ஒன்று, 3.படப்பிடிப்பு இரண்டு 4. நீதிமன்ற விசாரணை. மொத்தப் படம் இரண்டே முக்கால் மணிநேரங்கள். கொட்டாவி வருமா? வராதா?

விஜய்சேதுபதியின் அந்த ஒற்றை வேடத்தை மனதில் வைத்துக் கொண்டு மொத்தக் கதையையும் எழுதியிருக்கிறார்கள். அவுரங்கசீப் நாடகத்தின் எட்டு நிமிட நீண்ட அந்த ஒற்றைக்காட்சியில் நடிப்பில் அசத்துகிறார் விஜய்சேதுபதி.

காலாகாலமாக மேடைநாடகங்களின் நலிவை காட்சிப் படுத்தியிருப்பது அழகு. ஏனோ நாம் இழந்து போன ஏதோவொன்றை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். பாலாஜி தரணீதரன். தங்கள் நாடகத்துக்குக் கூட்டம் குறைவாக இருப்பது, காலியான அரங்கத்தை வெறுமையாகப் பார்த்து விஜய்சேதுபதி வருந்தும் காட்சிகள், விஜய்சேதுபதி ஆட்டோவில் வரும்போது தெருவில் மக்கள் கூட்டமாக செல்ஃபி எடுத்துக் கொள்வது, டாஸ்மாக்கில் கூட்டம் நிற்பது என மேடைநாடகங்கள் மீதான ஊடகத் தொழில்நுட்பத்தின் சுரண்டலை காட்சிப்படுத்தியிருப்பது அழகு.

ஆனாலும் விஜய்சேதுபதியை எதிர்பார்த்துப் போன ரசிகர்களின் நிலை அந்தோ பரிதாபம். இந்த முதல் அரைப்பகுதி முடிந்து இரண்டாவது அரைப்பகுதியில் இயக்குனர் எட்டிப்பார்க்கிறார். அந்த காட்சிகள் அனைத்தும் ஜாலியாக நகர்கின்ற போது இடைவேளை வருகிறது. படம் ஆரம்பித்து ஒன்றரை மணிநேரத்தில் இடைவேளை விடும்போது ‘ஆஹா! செகண்ட் ஆஃப் செம்மயா இருக்கும்போல ‘ என்று வெளியே போய்விட்டு வந்து பார்த்தால் மீண்டும் அதே போன்ற காட்சிகளில் அசூயை தட்டுகிறது. மேடைநாடகங்களின் அழிவுகுறித்த ஆவணப்படமோ என்று எண்ண வைத்துவிட்டு கடைசியில் ஒருமேடை நாடகம் அளவுக்கு திரைக்கதை அமைத்திருப்பதில் ரசிகர்களுக்கு ரத்த வாந்தி வருகிறது.

சரவணனாக வரும் ராஜ்குமாரும், டைரக்டராக வரும் பக்ஸ் பகவதி பெருமாளும் கலகலக்க வைத்திருக்கிறார்கள். ராஜ்குமார் நடிப்பு வராமல் திணறும் காட்சிகளும் அதற்கு பக்ஸ் கொடுக்கும் அதிர்ச்சி முகபாவங்களும், படக்குழுவினர் எகத்தாளம் செய்யும் காட்சிகளும் நல்ல காமெடி.

படம் சீரியசாக இருக்க வேண்டுமென்று பரசுராமனாக நடித்திருக்கும் மௌலியும், ஆதிமூலத்தின் மனைவி லெட்சுமியாக வரும் ‘வீடு’ அர்ச்சனாவும் படம் முழுக்க வீங்கிய மூஞ்சோடே அலைகிறார்கள். ஆவியாக நடித்து பணம் ஈட்டிக் கொடுத்த பின்னும் ஏன் இவர்கள் சோகமாக அலைகிறார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளராக இருந்து கொண்டு ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை தனபால் என்ற கதாபாத்திரத்தில் செமயாய் கலாய்த்திருக்கிறார்கள். தனபாலாக வரும் சுனிலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கவனம் ஈர்த்திருக்கிறார். இயக்குனர் பாரதிராஜா, உதிரிப்பூக்கள் மகேந்திரன் , பார்வதி நாயர், காயத்ரி , ரம்யா நம்பீசன் , கருணாகரன் கதையில் வந்து போகிறார்கள்.

செத்தும் கெடுத்தான் சீதக்காதி:

ஆவியாக நடிக்கிறார், படம் ஹிட்டு, ’ஐயா நடிக்கும்’ என்ற பில்டப் விளம்பரங்கள், தெருவுக்குத் தெரு ஃப்ளக்ஸ்கள் என்று கதை அளந்து விட்டு, விஜய்சேதுபதிக்கு நிகராக அந்த ஆதிமூலம் கதாபாத்திரத்தின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்பதாலோ என்னவோ ஆதிமூலம் ஆவியாய் நடித்த எந்தக் காட்சியையும் படத்தில் காட்டவில்லை. பதிலாக ஆதிமூலத்தின் ஆவி, தனது கொள்கைகளை மீறுபவர்களின் மீது வராமல் அவர்களை கோமாளியாக்கி விடுவதை நகைச்சுவை என்ற பெயரில் படமாக்கி விடலாம் என்று எண்ணியிருப்பார்கள் போலும். படம் கிழிந்து தொங்கி விட்டது.

அந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்ட காட்சி சமகால காமெடி. படத்தில் ஆங்காங்கே வெடித்துச் சிரிக்கக் கூடிய காட்சிகள் உண்டென்றாலும் கூட படத்தின் போக்கு பார்வையாளனை தூங்க வைத்துவிடுகிறது. தூக்கத்தில் எப்படி சிரிக்க முடியும்?

பின்னணி இசை நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் சாயலில் இருக்கிறது. ஒளிப்பதிவு நலம். காலகட்டத்துக்கேற்ற ஒளியமைப்பு.

இயக்குனர் பாலாஜி தரணிதரன் , நடிகர் விஜய் சேதுபதி காம்பினேஷன் என்றதும் இருந்த எதிர்பார்ப்பை புஸ்வாணம் விட்டு காலி செய்திருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு கால்ஷீட் கிடைக்கவில்லையா இயக்குனரே?

மொத்தத்தில் விஜய்சேதுபதி இல்லாத விஜய்சேதுபதியின் இருபத்தைந்தாவது படமான ‘சீதக்காதி’ ரசிகர்களுக்கு சீதபேதி.

0 Comments

Write A Comment