Tamil Sanjikai

தாழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படும் சாதியைச் சேர்ந்த தோல் இசைக் கருவிகள் செய்யும் ஜான்சனின் மகன் பீட்டருக்கும் , உயர்ந்த சாதி என்று தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்ட சாதியைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் வேம்பு ஐயருக்கும் இடையில் நடக்கும் கதைதான் சர்வம் தாளமயம்.

வாத்தியக்கருவி செய்துகொடுக்கும் ஜான்சனின் மகன் பீட்டர் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகர். பரீட்சை எழுதாமல் விஜய்பட முதல்ஷோவுக்கு டிரம்ஸ் வாசித்து ஆடிக்கொண்டும், தெருவில் சண்டை போட்டுக்கொண்டும், கட்- அவுட்டுக்கும், போஸ்டருக்கும் பாலபிஷேகம் செய்து கொண்டு தறுதலையாகத் திரிகிறான். அப்படியொரு சண்டையில் தலையில் பாட்டிலால் அடிக்கப்பட்டு சகநண்பர்களின் உதவியோடு நர்சுகள் தங்கியிருக்கும் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு தையல் போடப்படுகிறது.

தையல் போட்ட நர்சு சாராவின் மீது மையல் கொண்டு அவள் பின்னால் திரிகிறான். அவளுக்காக ஜெர்மன் மொழி கற்றுக்கொள்ளச் செல்லும் அவனை சாரா புறக்கணிக்கிறாள். இந்நிலையில் ஒருநாள் வேம்பு ஐயர் சங்கீத அகாடமியில் நடக்கும் ஒரு இசை விழாவுக்குச் செல்கிறார். அவரின் உதவியாளன் மணி செல்போன் பேசிக்கொண்டே வாத்தியக்கருவியை எடுக்க அது கீழே தவறி விழுகிறது. இதைப்பார்த்த வேம்பு ஐயர் கோபத்தில் மணியைக் கடிந்து கொண்டு, ஜான்சனுக்கு போன் செய்து வேறு ஒரு கருவியை வரவழைக்கிறார்.

ஜான்சன் தன் மகன் பீட்டரிடம் வாத்தியக்கருவியைக் கொடுத்தனுப்புகிறார். பீட்டர் அதைக்கொண்டு போய் மேடையில் அமர்ந்திருக்கும் வேம்பு ஐயரிடம் கொடுக்க அவர் அதை வாங்கிக்கொண்டு மேடையில் தனக்கு அருகில் அமரச் செய்கிறார். அங்கு அமர்ந்த பீட்டர் வேம்பு ஐயரின் விரல் ஜாதங்களில் மெய்மறந்து போகிறான். அடிப்படையில் Percussion knowledge இருக்கும் பீட்டருக்கு அதை வேம்பு ஐயரின் மூலம் முறைப்படி கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். அப்போது ஜாதீய அடிப்படையிலான ஒரு தடைக்கல் அவன் முன் வைக்கப் படுகிறது. அதையும் மீறி அவரிடம் சங்கீதம் படிக்க அமர்கிறான். வேம்பு ஐயரின் உதவியாளன் மணி இதனால் ஆத்திரமடைகிறான். ஒருகட்டத்தில் மணியை வேம்பு ஐயர் வெளியேற்ற மணியின் சூழ்ச்சி வலையில் பீட்டர் சிக்குகிறான். மணி தன்னுடைய தங்கை அஞ்சனா வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒரு இசை நிகழ்ச்சிக்கு வரும் பீட்டரை கேவலப்படுத்தி அவனுக்கு கெட்ட பெயரை உருவாக்குகிறான். அடிப்படையில் தொலைக்காட்சி சார்ந்த விஷயங்கள் பிடிக்காத வேம்பு ஐயர் பீட்டரைத் துரத்தி விடுகிறார். பீட்டர் போலீசில் சிக்குகிறான்.

பீட்டர் போலீசிடமிருந்து தப்பித்தானா ? அவன் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டானா ? அவனது காதல் என்னவானது ? என்பதுதான் மிச்சக்கதை.

ஒளி ஓவியரும் , இயக்குனருமான ராஜீவ்மேனனின் எழுத்தில் அவரே இயக்கியிருக்கும் படம் சர்வம் தாளமயம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்திருக்கும் ஒரு அற்புதமான படம் சர்வம் தாளமயம். செம்ம Balanced Script. இருவேறு மலைமுகடுகளின் இரண்டு விதமான உச்சத்தை அட்டகாசமாகக் கட்டி ஆண்டிருக்கிறார். அவரது தைரியத்துக்கு ஒரு சபாஷ் சொல்லியாக வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மெல்லிய சாதி அரசியல் பேசிக்கொண்டு அதுவும் உரக்கச் சொல்லியபடியே கதையைக் கொண்டு போன விதம் பிரமாதம்.

காட்சியமைப்பிலேயே இரண்டு தரப்பு பொருளாதார, சாதிய அடிப்படையிலான வேறுபாடுகளைக் காட்டும்போழுதே கதையின் தளம் புரிந்து போகிறது. கதையின் தளத்தை பார்வையாளனுக்கு முதலிலேயே காட்டி விட்டு மீண்டும் அவனுக்கு தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டிருக்கும் சாமார்த்தியம்தான் நல்ல திரைக்கதை அமைப்பு.

கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்வதாகச் சொல்லும் பீட்டரிடம் அவனது அப்பா ஜான்சன், கோவிலில் இருக்கும் நந்திக்கு மணியடித்து விட்டு, அதே பசுமாடு இறந்துவிட்டால் தோலுக்காக நம்மைத்தான் கூப்பிடுவார்கள் என்று சொல்லும் இடம், அதற்கு எதிர்கேள்வியாக பீட்டர், இந்தத் தோலையெல்லாம் மாடு செத்தபிறகுதான் உரிப்பார்களா என்று கேட்டவுடன் அதற்குப் பதில் சொல்லாமல் அந்த ஸ்பேனரை எடு! என்று சொல்வது சிறப்பான காட்சியமைப்பு.

சாலையில் மேளமடித்து ஆடிக்கொண்டிருக்கும் பீட்டரைப் பார்த்து வேம்புஐயர் மணியிடம் கேட்பார், யார் அந்தப்பையன் என்று, அதற்கு மணி அவரிடம் அது அந்த ஜான்சனின் மகன் என்று சொன்னவுடன் வேம்பு ஐயர், அதானே! மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்பார்.

தன்னுடைய சொந்த சாதியினருக்கு நெற்றியில் வைக்கும் குங்குமத்தை வேற்று சாதியின பீட்டருக்கு கையை கீழே வைத்து மேலிருந்து கொடுப்பது, வேம்பு ஐயர் தவறவிட்ட ருத்திராட்சத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் பீட்டரிடமிருந்து அதைத் தட்டிவிட்டு, அதை ஒருதுணியில் எடுத்துக் கொண்டு போய் துளசிச் செடியில் மீது வைத்து நீரூற்றிக் கழுவி மணி வேம்பு ஐயரிடம் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்ட வேம்பு ஐயர் அதை ஆவலோடு பார்க்கும் பீட்டரிடம் இது உனக்கு வேண்டுமா என்று கேட்பார். அப்போது அதை மறுக்காத பீட்டரிடம் அதை ஜெபித்துக் கொடுப்பார். அதைப்பெற்றுக் கொண்ட பீட்டரிடம் மணி, இதை அணிந்து கொண்டபின் அசைவமும், குடியும் வேண்டாம் என்று சொல்வான்.

மணி கொடுத்த புகாரின் மீது காவல் நிலையத்தில் இருக்கும் பீட்டரை விடுவிக்கச் சொல்லி கேட்கும் விஜய் ரசிகர் மன்றத் தலைவரிடம் போலீஸ்காரர் சொல்லுவார், யோவ் ! ஹோம் செக்கரட்டரி தலையிட்டுருக்காங்க என்று சொல்லும் காட்சியில் ஏனோ எஸ்.வி.சேகர் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார். அதேபோல பீட்டர் சார்ந்திருக்கும் சாதிக்கட்சித் தலைவர் தொலைக்காட்சி நேரலையில் வந்து எங்கள் கட்சி இதை சும்மாவிடாது என்று அறைகூவல் விடுப்பார், அவரது கதாபாத்திரப்பெயர் கோகுல்ராஜ். நெஞ்சில் ருத்திராட்ச மாலையும், முதுகில் சிலுவை வைத்த ஜெபமாலையோடும் சுற்றும் பீட்டர் என்று காட்சிக்குக் காட்சி ஒருவித பேலன்சிங் வந்து கொண்டிருக்கும்.

படத்தின் முதல் ஹீரோ நெடுமுடி வேணுதான். அவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாகக் கடந்துபோகிறார் மனிதர். எத்தனை பெரிய அனுபவசாலி அவர் என்பது திரையில் தெரியும். மிருதங்கத்தை அவர் கையாளும் விதம், அவரது முகபாவனைகள், கர்நாடக இசையில் தான்தான் முதல் இடம் என்று அவர் பீற்றிக் கொள்ளும் காட்சி, பீட்டரைத் தாக்கிய மணியை அவன் அத்தனை காலம் தன்னுடைய விசுவாசத்திற்குப் பாத்திரவான் என்பதையும் மீறி அவன் செய்யும் தவறுக்காக அவனை வெளியே போகச் சொல்லும் காட்சி, தன்னுடைய சொந்த சாதிக்காரன் தன்னுடைய வயதைக் காரணம் காட்டி தன்னுடைய கலையை அசட்டை செய்து, தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு இறங்கிப் போகும் காட்சி, தன்னுடைய கலைவாரிசாக பீட்டரை அறிவிக்கும் இடம் எல்லாம் அல்டிமேட்.

படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான். தன்னுடைய மருமகன் என்பதற்காக இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். படத்தின் தலைப்பிற்கேற்ப படம் முழுவதும் தாளம் தப்பவேயில்லை. படத்தின் அனேகக் காட்சிகள் அட்மாஸ்பியர் சவுண்டுகளிலேயே பயணிக்கிறது. தேவையில்லாத பின்னணி இசை படத்தின் வலுவைக் குறைக்கும் என்று புரிந்து வைத்துக் கொண்டு உழைத்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் குதூப் கிருபா அற்புதமான பணியை மேற்கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சியில் வரும் மிருதங்க இசைதான் கதாபாத்திரம், நோக்கம் அல்லது திரைக்கதையின் வெற்றியை தீர்மானிக்குமாதலால் அந்த இடம் இசையமைப்பாளருக்கு ஒரு சவால்தான். ஆனாலும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். பாடல்களும் நன்றாக இருக்கிறது. சர்வம் தாளமயம் பாடல் அருமையாக இருக்கிறது. ‘எப்போ வருமோ எங்க காலம்’ பாடல் வலியோடு ஊடுருவும் துள்ளல் இசை. மாயா மாயா வருடல்.

படத்தின் மூன்றாவது ஹீரோ ஜீ.வி.பிரகாஷ். நன்றாக நடித்திருக்கிறார். தோற்றத்துக்குப் பொருத்தமான வேடம். தண்ணி அடித்துவிட்டு தன் அப்பாவிடம் சலம்பும் இடங்கள் சூப்பர். காதலியிடம் தனக்கு எந்த சப்தத்தைக் கேட்டாலும் தாளங்கள்தான் நினைவுக்கு வருகிறது என்று சொல்லும் இடத்தில் மிளிர்கிறார். குரு தன்னை மறுபடியும் சேர்த்துகொள்வாரா என்று மருகும்போது அவரது காதலி, இசைக்கு எதற்கு ஒரு தனிமனித குருத்துவம் ? இவ்வுலகில் எல்லாமே இசைதான் என்று சொல்லும்போது அங்கு சாரல்மழை பெய்வது அழகான ஹைக்கூ காட்சி.

மணியாக வரும் வினீத் சிறப்பான வில்லன். சாதி ரீதியாக பீட்டரை ஒதுக்கும் போதும், பீட்டர் மீது ஒருவிதமான வெறுப்புணர்ச்சியை பார்வையில் கக்குவதும், வேம்பு ஐயர் தன்னை வெளியே போகச் சொல்லி சொன்னவுடன், அண்ணா !!! என்று உருகி விட்டு மறுகணமே பீட்டரையும், வேம்பு ஐயரையும் சபித்துவிட்டு வெளியேறும் காட்சி அப்படியே அந்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

ரவி யாதவின் ஒளிப்பதிவு அட்டகாசம். இயக்குனர் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளாரானதால் எல்லா ஃபிரேம்களும் வர்ணமயம். சர்வம் தாளமயம் பாடலில் வடநாட்டின் அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஆண்டனியின் கத்தரி தேவையான இடங்களில் வெட்டியிருக்கிறது. எடிட்டிங் உறுத்தவில்லை.

நகரத்தின் சாதிய முகம், கிராமத்தின் ஜாதிய முகம் என்று தனித்தனி வேற்றுமையில் ஒற்றுமையாக காலம்காலமாக நீண்டு கொண்டேயிருப்பதை பதிவு செய்திருப்பது நன்று. ஆனாலும் கூட குறிப்பிட்ட அந்த உயர்சாதியினர் சதாகாலமும் தங்களின் உயர்வு,கலாச்சாரம் மற்றும் மேன்மை குறித்தே பேசிக்கொண்டிருப்பார்கள் என்றும், தீண்டாமை குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் , அந்தக் குறிப்பிட்ட சாதியினர் அழுக்காக, கருப்பாக இருந்து கொண்டு, எந்நேரமும் கள்ளைக் குடித்துவிட்டு, மேளம் இசைத்து ஆடிக்கொண்டிருப்பார்கள் என்றும், தங்கள் மீதான எந்த வன்முறையையும் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றும் படங்களில் தொடர்ந்து காட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.

ஒரு தாழ்த்தப்பட்டவன் தன்னுடைய கையால் செய்த கருவியை வாசித்துவிட்டு, அந்த இசைக்கூட்டத்தில் அவனுக்குப் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு பார்வையாளனாகக் கூட இல்லை என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். ஒரே சாதியில் ஒரு வேம்பு ஐயரும், அதற்கு நேர்மறையான குணத்தில் மணியும் இருப்பதும், அதற்க்குக் கீழ்த்தளத்தில் ஜான்சனுக்கும், பீட்டருக்கும் தங்களுடைய சொந்த கிராமத்தில் தனிக்குவளைகள் தரப்படுவதையும் வேறுவேறு அரசியலாகப் பேச முனைந்திருப்பது தனியான ஒரு ஸ்டைல்.

எல்லா ஜாதிகளிலும் இருக்கும் நல்லவர்களும் கெட்டவர்களும்தான் தங்கள் சகமனிதர்களின் நன்மைக்கும், தீமைக்கும் காரணகர்த்தாவாக இருப்பார்கள் என்று பூடகமாகச் சொல்லும் இயக்குனரின் பெயருக்குப் பின்னால் ஒட்டியிருக்கும் அபத்தம் இந்தப் படத்தை தனித்துவமாகக் காட்ட மறுத்திருக்கிறது. இல்லையென்றால் படத்தை பரியேறும் பெருமாளின் இன்னொரு கோணமாகப் பார்த்திருக்கலாம். Conversation Sequence எதுவுமே போரடிக்காமல் ஏதோவொன்றை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நேர்த்தியான வசனங்கள் அதற்குக் கைகொடுத்திருக்கிறது. மிக மெதுவான கதைநகர்தல் ஆடியன்சை திரையரங்கத்துக்கு வெளியே அனுப்பாமல் அமர வைத்திருக்கிறது என்பதுதான் படத்தின் வெற்றி. A கிளாஸ் முதல் C கிளாஸ் ரசிகன் வரைக்குமான கதை என்றாலும் கூட சினிமாவை ரசிப்பவர்களே இந்தப் படத்தை ரசிப்பார்கள். சர்வம் தாள மாயத்தை கிளாசிக்கல் படத்தில் வரிசையில் தாரளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

0 Comments

Write A Comment